Sunday, November 21, 2021

உரிமைக் குரலை உரத்து முழங்கும் ‘ஜெய் பீம்’

நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஜெய் பீம்’. தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு வந்த திரைப்படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இந்தப் படம் தான் என்றால் மிகையில்லை.

படத்தின் முக்கியத்துவம் கருதி திராவிடர் கழகத் தலைவர் முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வரை திரைப்படத்தைப் பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். வெளியான முதல் வாரம் பெரும் வரவேற்பையும், அடுத்த வாரம் விவாதங்களையும் குவித்தது ‘ஜெய் பீம்’.  இன்னும் கூட சிலர் இது பற்றிக் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் ஆக்கம், கருத்து, கதாபாத்திரங்கள், பேசப்பட்ட செய்தி, நபர் அல்லது இயக்கத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், எப்படியெல்லாம் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பவை குறித்-தெல்லாம் பேசித் தீர்த்திருக்கிறார்கள் சமூக ஊடகவாசிகள். அப்படிப் பேசுவதற்கு இப் படத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பி யாரும் ஒதுக்கிவைக்க முடியாதபடி படம் ‘பேசாப் பொருளைப் பேசி’யிருக்கிறது.

1993-இல் கடலூர் மாவட்டத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதைக்கு, விறு-விறுப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்-கிறார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல். படத்தை சூர்யா, ஜோதிகா இணையர் தயாரித்திருக்கிறார்கள்.

பாம்பு, எலிகளைப் பிடித்தும், கடுமையான உடல் உழைப்புத் தொழிலில் ஈடுபட்டும் வாழும் இருளர் என்ற பழங்குடியின மக்கள் படும் துயரங்களை ராசாக்கண்ணு _ செங்கேணி ஆகியோரின் கதை மூலம் கவனப்படுத்தி-யிருக்கிறது ஜெய்பீம். தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே பழங்குடியினர் வாழ்கின்றனர். அவர்களும் பல்வேறு சமூகத்தவராகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்கிறவர்கள். அவர்களுக்கான அரசியல் உரிமையோ, பிரதிநிதித்துவமோ  கிடைப்-பதற்கான வாய்ப்பற்ற மக்கள் சமூகம். மேலும் பழங்குடியினர் என்று பொருள் கொள்ளப்பட வேண்டிய Tribes என்னும் பெயர், மலைவாழ் மக்கள் என்று தவறாகப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாலும், (காட்டு-வாசிகள் என்று பொருள்படும் வனவாசி என்றுதான் ஆர்.எஸ்.எஸ். கம்பெனிகள் குறிப்பிடுகின்றன) சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் நிலை மேலும் மோசமாகும்.




அங்கு இருப்போருக்கு தங்கள் இருப்பை உறுதி செய்து சான்றிதழ் பெறுவதே மிகவும் கடுமையான காரியமாக இருக்கும். 'இருளர் என்றால் பாம்பு பிடிக்கத் தெரியுமா?’ என்பது சர்வசாதாரணமாகக் கேட்கப்படும் கேள்வி. “அதெல்லாம் வேண்டாம். படிக்கட்டும்னு தானே சார் சர்டிபிகேட் கேட்குறோம்’’ என்று பொட்டில் அறைந்தாற் போல் பதில் சொல்லுகிறது இப்படத்தின் ஒரு காட்சி.

படத்தின் மையக் கரு _ விசாரணையை முடிக்க முடியாத வழக்குகளில் நாடோடிகளும், பழங்குடியினரும் தொடர்பேயின்றி கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுதலும், 'லாக் அப் டெத்’ எனப்படும் காவல் நிலைய விசாரணையின் கொடுமைகளும், கொலைகளும் பற்றியது. அதை தொடக்கம் முதலே அழுத்தம் குறையாமல் எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

திருட்டு வழக்கு ஒன்றில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு மீது சந்தேகம் எழ, அவரது அக்கா உள்பட உறவினர்கள் இழுத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்படுன்றனர். வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த ராசாக்கண்ணுவும் அகப்பட, அவர் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களுக்கு மத்தியில், அவர்கள் கூட்டாக காவல்-நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்ற சூழலில் அறிவொளி இயக்கத் தோழர் மூலம், உள்ளூர் கம்யூனிஸ்ட் தோழர்களை அணுகி, பின்னர் வழக்குரைஞர் சந்துரு(சூர்யா)வின் சட்டப் போராட்டத்தினால் ராசாக்கண்ணுவுக்கு நடந்தது என்ன, அது எப்படி மறைக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து உரிய நீதியைப் பெறுகிறார்.

ஒடுக்கப்பட்டவரினும் ஒடுக்கப்பட்டவர்-களாகவும், அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டவர்களாகவும் உள்ள மக்களை அடையாளப்படுத்தி, அவர்கள் மீது கவனம் குவித்திருப்பது இப்படத்தின் முதல் சாதனை. சமரசம் இன்றி பல பிரச்சினைகளைப் பேசியிருப்பதும், திரைப்படத்தின் தன்மை மாறாமல் எடுத்துச் சென்றிருப்பதும் பலம்.

படத்தைத் தயாரித்ததுடன், அதில் முக்கியப் பாத்திரமேற்று நடித்து, இக்கதை பேசப்படக் காரணமாக அமைந்திருக்கும் நடிகர் சூர்யா பாராட்டுக்குரியவர். தனது சமூக அக்கறைக்காக தான் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளையும், சில நேரம் குறிவைத்து ஆதிக்கவாதிகளால் ட்ரால் செய்யப்பட்டாலும் அவற்றைக் கவனமாகவும், சமரசமின்றியும் எதிர்கொள்கிறார்.

படத்தின் முக்கியப் பாத்திரமேற்று நடித்திருக்கும் மணிகண்டன், லீமாரோஸ், தமிழ் உள்ளிட்ட ஒவ்வொரு நடிகரும், சரியான ஒளிப்பதிவு, தேவையான இசை என்று இப்படத்தின் ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ், லெனின் என்று படத்தின் பல இடங்களிலும் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள், நடக்கும் போராட்டத்தின் பின்புலமாக அடையாளப்படுத்தப்-பட்டிருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது. சமூக நீதி இன்னும் ஆழமாகச் சென்று சேர வேண்டியதன் அவசியத்தைப் பலருக்குப் புரிய வைத்திருக்கிறது இப் படம். சமூகநீதிப் பணிகளில் தங்களை ஒப்படைத்துக் கொண்டோரைத் தவிர, ஏன் இன்னும் சமூகநீதிக்கான குரல் என்று புரியாமல் இருக்கும் மக்களுக்குக் கொஞ்சமேனும் இது போன்ற திரைப்படங்கள் உணரவைக்கும். படத்தின் போக்கில் எழும் விமர்சனங்கள் கூட படத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டுள்ளன.

சமூகத்தின் வளர்ச்சியில் கலைப் படைப்பு-களின் பங்களிப்பு முக்கியமானது. இத்தகைய குரல்களுக்கு நாம் தரும் ஆதரவு, இன்னும் கேட்கப்படாத குரல்களைக் கேட்கவைக்கும். உரிமைக்காக ‘ஜெய் பீம்! வாழ்க பெரியார்! லால் சலாம்!’ என முழங்க வைக்கும்.

Sunday, March 23, 2014

ஜாதி தின்ற சரித்திரம்: ஜெ.சி.டேனியல்

காலம் 20-ஆம் நூற்றாண்டுக்குள் புகும்போதே திரைப்படம் என்னும் ஊடகத்தின் தாக்கம் உலகிற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவில் முதல் படம் எடுக்கப்பட்டது 1912-இல் தாதா சாகேப் டார்னே என்பவரால். அதற்குப் பிறகு இந்தியாவின் முதல் படம் என்று இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள படமான ராஜா ஹரிச்சந்திரா வெளிவந்தது 1913 மே மாதத்தில். படத்தை உருவாக்கியவர் டி.ஜி.பால்கே. பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை என பட உருவாக்கப் பணிகள் பல இடங்களிலும் தொடங்கின.


வெளிநாட்டிலிருந்து வந்த பேசாத் திரைப்படங்களை தமிழகத்தின் ஊர் ஊராகச் சென்று காட்டினார் வின்சென்ட் சாமிக்கண்ணு. தமிழ்நாட்டின் முதல் படத்தை கீசகவதம் என்ற பெயரில் உருவாக்கினார் நடராஜ முதலியார். தமிழ் பேசாவிட்டாலும் அதுதானே முதல் தமிழ்ப் படம். இத்தகைய சாதனைகளின் தொடர்ச்சியாக 1920-களின் பிற்பகுதியில் இன்றைய தென் தமிழகமும் கேரளாவும் இணைந்த அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் இத்தகைய முயற்சிகளை ஒருவர் தொடங்கினார்.
தனது 22-ஆம் வயதிலேயே சிலம்பாட்டம் குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி வெளியிட்ட அவர், அந்த சிலம்பாட்டத்தின் சிறப்பை அசையும் படமாக உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார். அப்படி திருவிதாங்கூரின் முதல் அசையும் படத்தை உருவாக்க கனவு கண்டு, அதற்காக முயன்று ஒரு திரைப்படத்தையே உருவாக்கி வெற்றி பெற்ற அவர்தான் ஜெ.சி.டேனியல். (இன்று தமிழ்நாட்டில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் பிறந்தவர்.) அவரின் வரலாற்றைத் தான் செல்லுலாய்டு என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் மலையாள இயக்குநர் கமல். செல்லுலாய்டு படத்தை கோவா திரைப்பட விழாவில் காணும் வாய்ப்புப் பெற்றேன். அது முதல் மலையாளத் திரைப்படத்தின் மறைக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல; ஜாதி என்னும் கொடூரத்தின் தாக்கம் எந்த அளவு இந்த நாட்டில் இருந்தது என்பதற்கான சாட்சி; ஒடுக்கப்பட்ட மக்களின் எத்தனையோ சாதனைகள் எப்படி ஜாதி ஆதிக்கத்தால் மறைக்கப்பட்டன _- அழிக்கப்பட்டன என்பதற்கான ஒரு சோறு பதம்; ஜாதி தின்று செரித்த சரித்திரம்.
அதன் தமிழ் வடிவம் ஜெ.சி.டேனியல் என்ற பெயரிலேயே வெளியாகியுள்ளது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
திரைப்படங்களின் மீது கொண்ட ஆர்வத்தால் படித்துத் தெரிந்துகொண்டது மட்டுமல்லாமல், பம்பாய் சென்று பால்கேவின் ஸ்டுடியோ உள்ளிட்ட இடங்களில் சுற்றி, அவர்களின் உதவியால் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவையும் பெறுகிறார் டேனியல். திருவிதாங்கூரின் முதல் படத்தை உருவாக்கும் பணியில் மனைவி ஜானட், நண்பர்களின் உதவியோடு ஈடுபடுகிறார். தன் குடும்பச் சொத்து, வளங்கள் அனைத்தையும் விற்று ட்ரவாங்கூர் நேசனல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்குகிறார். புராணப்படங்களில் மூழ்கியிருந்த அன்றைய இந்திய சினிமாவில் மாறுபட்டுச் சிந்திக்கிறார் டேனியல். பைபிளின் கதைகளிலிருந்து ஒன்றைப் படமாக எடுக்கலாம் என்ற நண்பர்களின் எண்ணத்தையும் ஏற்காமல் சமூகக் கதையொன்றைப் படமாக்க விரும்புகிறார். தொலைந்த குழந்தை என்று பொருள்படும் விகதகுமாரன் என்ற தலைப்பில் ஒரு சமூகக் கதையைத் திரைப்படமாக எடுக்கத் தொடங்குகின்றனர். 
எழுத்துப் பணிகளை நிறைவு செய்து முக்கியக் கதாபாத்திரங்களையும் முடிவு செய்தபின்னர், கதாநாயகியைத் தேர்வு செய்வதற்காக முயலும் போது அதற்கு யாரும் முன்வரவில்லை. பால்கேவைப் போல ஆணைப் பெண் வேடமிட்டு நடிக்க வைக்கவும் டேனியலுக்கு விருப்பமில்லை. எனவே, பம்பாயில் இருக்கும் நடிகைகளில் யாரையாவது அழைத்து வரலாம் என்ற திட்டத்தில் பம்பாய் சென்று ஆங்கிலோ இந்திய நடிகை ஒருவரை அழைத்து வருகிறார்கள். சம்பளம், ரயில் பயணம், கார், அரண்மனை என அவர்கள் கேட்ட அத்தனை வசதிகளையும் தன் சக்திக்கு மீறி செய்யத் தொடங்கினாலும், சாதாரணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க அந்த நடிகை மறுக்கிறார். கடவுளாகவோ, அரசியாகவோதான் நடிப்பேன் என அடம்பிடிக்க, அவரை மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பிவிட்டு அடுத்த கட்டம் குறித்து யோசிக்கும்போதுதான் கூத்து, நாடகங்களில் நடிப்போர் குறித்து நண்பர்கள் சொல்கிறார்கள். கூத்தில் ரோசம்மாவின் நடிப்பு டேனியலை வெகுவாகக் கவர, ரோசம்மாவையே தன் படத்திலும் நடிகையாக்கிட விரும்புகிறார் டேனியல்.
ரோசம்மா
தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ரோசம்மா, (முன்பே குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருந்த ரோசம்மாவின் பெயர் டேனியல் மற்றும் அவர் மனைவியால் ரோசி என வைக்கப்படுகிறது) விகதகுமாரன் படத்தில் நாயர் பெண்ணாக நடிக்க வைக்கப்படுகிறாள். சிறப்பான அவள் நடிப்புடன் சில நாட்களில் அவளது பகுதி படமாக்கப்பட்டுவிட, அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பையும், படத் தொகுப்பையும் முடித்து திரையிடலுக்குத் தயாராகிறது படம். இதற்கிடையில் இன்னும் சில சொத்துகளும் டேனியலால் விற்கப்படுகின்றன. 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் 1930-ஆம் ஆண்டு நிறைவடைந்து, விகதகுமாரன் படம் வெளியீட்டுக்குத் தயாராகிறது. படத்தின் முதல் காட்சிக்கு அழைக்கப்படுகிறாள் ரோசி. படத்தை வெளியிட வந்த நம்பூதிரிகளும், வழக்குரைஞர் பார்ப்பனர்களும், உயர்ஜாதியினரும் படத்தைப் பார்க்க கொட்டகைக்குள் நுழையும் ரோசியைக் கண்டு அருவெறுப்படைகிறார்கள். 
’ரோசம்மா’ கதாபாத்திரம்
தீண்டத்தகாதோருடன் அமர்ந்து தாங்கள் எப்படித் திரைப்படம் பார்ப்பது என மறுக்க, என்ன செய்வது என டேனியல் மருகி நிற்க, வேறு வழியின்றி படத்தின் கதாநாயகி ரோசி கொட்டகைக்கு வெளியிலேயே கண்ணீருடன் அடுத்த காட்சிக்குக் காத்திருக்க, டேனியலைப் பாராட்டி வந்தோர் பேச, படம் திரையிடப்படத் தொடங்குகிறது. சிறிது நேரத்திலேயே திரைப்படக் கொட்டகைக்குள் கூச்சல். ஒரு தாழ்த்தப்பட்ட பெண் உயர்ஜாதிப் பெண்ணாக நடிக்கவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு ஜாதி வெறியர்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அரங்கின் வாயிலில் காத்திருந்த ரோசி துரத்தப்படுகிறாள். ரோசியின் வீடு எரிக்கப்படுகிறது. ஜாதி வெறியர்களால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்து, உயிருக்குப் பயந்து ஊரைவிட்டே ஓடிவிடுகிறாள் மலையாள சினிமாவின் முதல் கதாநாயகி.
சொத்துகளை சினிமாவுக்காக விற்று, அதுவும் திரையிடப்படும் இடங்களில் எல்லாம் ஜாதிவெறியர்களின் எதிர்ப்பைப் பெற, அகஸ்தீஸ்வரத்திற்கே திரும்பி, பல் மருத்துவம் கற்று மருத்துவராகிறார் டேனியல். புதுக்கோட்டையில் குழந்தைகள், குடும்பம் என்று இருப்பவரை மீண்டும் திரைப்படத் துறை நோக்கி இழுக்கிறார் தமிழ்த் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா. சென்னைக்கு திரைப்படக் கனவுகளை மீண்டும் சுமந்து கொண்டு வண்டியேறி, திரைப்பட ஏமாற்றிகளால் சொத்துகளை இழந்து, ஏழ்மை நிலைக்குச் சென்று அடையாளங்களற்று வாழ்க்கையைத் தொடர்கிறார். 
பின்னாளில் செம்மீன் படம் 1966-ஆம் ஆண்டு தேசிய விருது பெற்று மலையாள சினிமா பெருமையடைய, முதல் மலையாள சினிமாவை எடுத்த டேனியல் தமிழ்நாட்டின் அகஸ்தீஸ்வரத்தில் முதுமைப்பருவத்தைக் கழிக்கிறார். இதை அறியும் மலையாளத் திரைப்படப் பத்திரிகையாளரான சேலங்காட்டு கோபாலகிருஷ்ணன், தொடர் முயற்சியில் டேனியலைச் சந்தித்து பழைய வரலாற்றை நிறுவ முயல்கிறார். டேனியலின் மகன் ஹாரிஸ் டேனியல் சிறுவயதில் விளையாட்டுப் போக்கில் விகத குமாரன் படச்சுருளை எரித்துவிட, எஞ்சியிருப்பதோ அப்படத்தின் ஒரு புகைப்படமும், விளம்பரத் துண்டறிக்கையும் தான். டேனியலுக்குப் பிறகு அவரது நண்பர் சுந்தரராஜன் எடுத்த மார்த்தாண்ட வர்மா திரைப்படமும் கடனுக்கு அடமானமாகப் போய் ஒரு கொட்டடியில் நாசமாகிக் கிடக்கிறது. அதை மீட்கிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன்.
மலையாள சினிமாவின் முதல் முயற்சிகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள அரசின் பண்பாட்டுத் துறையை அணுகும் கோபாலகிருஷ்ணனுக்கு மறுப்புகளும், அலட்சியமும் பதிலாகக் கிடைக்கின்றன. பேசும் படமாக வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் பாலன் படம் தான் முதல் மலையாளப் படம் என அடம்பிடிக்கிறார் அய்.ஏ.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான ராமகிருஷ்ணன் அய்யர். இந்த (டேனியல்) நாடார் விசயத்தில் உனக்கென்ன இவ்வளவு அக்கறை? என்று ராமகிருஷ்ண அய்யர் கேட்கும் போது இந்த மறுப்புக்குப் பின்னால் இருப்பதும் ஜாதியே என்று உணர்ந்துவிடுகிறார் பத்திரிகையாளர் கோபாலகிருஷ்ணன். பிராமணரான டி.ஆர்.சுந்தரத்தின் படம்தானே பாலன். நீங்கள்லாம் இந்த மாதிரி சிந்திக்கிறீங்கன்னு புரிஞ்சு போச்சு சார்! என்று போட்டு உடைத்துவிட்டுக் கிளம்புகிறார் பத்திரிகையாளர். எனினும் அவரது முயற்சிகள் தொடர்கின்றன.
எந்தவித அங்கீகாரமும் இல்லாமல் டேனியல் தன் இறுதி மூச்சை விட, அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. திரைப்படத்துறை மீது இன்று மக்களுக்கு இருக்கும் அளவற்ற மோகம் ஒரு நடிகரின் படத்துக்குச் செய்யப்படும் மரியாதை மூலம் உணர்த்தப்படுகிறது. அதைப் பார்த்தபடி பேருந்தில் பயணிக்கிறார் ஹாரிஸ் டேனியல் (ஜெ.சி.டேனியலின் இளைய மகன்). மேலே நீங்கள் படித்தது கதையல்ல; வரலாறு. அது ஜெ.சி.டேனியலின் வரலாறு மட்டுமல்ல; சமூகத்தில் ஜாதியின் இறுக்கம் எப்படி என்பதற்கான சான்று! ஜெ.சி.டேனியலையாவது இன்று நாம் அடையாளம் காண்கிறோம். ஆனால், மலையாளத்தின் முதல் கதாநாயகியான ரோசியின் நிலை? ஒளிவெள்ளத்தில் வாழும் இன்றைய திரைக்கலைஞர்கள் மத்தியில் அடையாளமே இல்லாமல் தென் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் தன் வாழ்வை முடித்திருப்பார் அந்தத் திறமைவாய்ந்த கலைஞர். படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கமல், தனது கருத்தில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அதைப் பதிவு செய்கிறார். ஜாதியின் தீவிரம் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு அழுந்தச் சொல்லிப் புரியவைக்கிறது படம். அக்காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்தால் நிச்சயம் புத்தகமாக நீளும். பால்கே படம் எடுக்கும் போது அதைப் பார்த்து டேனியல் கற்றுக் கொள்வதாக ஒரு காட்சி. கர்ணனின் தொடையில் பரசுராமன் படுத்திருக்கும் போது கர்ணனின் தொடையை வண்டு துளைத்து ரத்தம் வழியும் மகாபாரதக் காட்சி. வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாட்டை அங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் இயக்குநர். 
இயக்குநர் கமலின் பதிவுகளில் எடுத்துக்காட்டாக சிலவற்றைச் சொல்லலாம். கதாநாயகியாக நாயர் பெண் வேடமணிந்து, அனைவருடனும் அமர்ந்து மதிய உணவு உண்ணாமல், தான் தூக்கி வந்த சட்டியிலிருந்து கஞ்சியைத் தரையில் அமர்ந்து அருந்தும் மனநிலையை, தங்களுக்கு அதுதான் இயல்பென்றும், விதிக்கப்பட்டதென்றும் ஒரு சமூகத்தையே கருதவைத்த கொடுமையை அக்காட்சி உணர்த்துகிறது. தான் நடித்த படத்தின் ஒரு காட்சியைக்கூடப் பார்க்க முடியாமல் துரத்தி அடிக்கப்படுகிற வலி எத்தகையது? அதுமட்டுமா, வர்ணாசிரமத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருப்பவர்களிடையே ஜாதிப் பற்றும், தீண்டாமை உணர்வும் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் பதிவு செய்கிறார். இப்படிப்பட்ட பதிவுகள் படம் முழுக்க கதையோடு பின்னிப் பிணைந்து நம் மூளையில் அவற்றை விதைத்துச் செல்கின்றன.
படத்தில் ஜெ.சி.டேனியலாக இளம் வயதிலும், முதுமையிலும், பின்னர் ஹாரிஸ் டேனியலாகவும் நடித்துள்ள ப்ருத்விராஜ், ஜேனட்டாக நடித்த மம்தா மோகன்தாஸ், ரோசியாக நடித்த சாந்தினி, சேலங்காட்டு கோபாலகிருஷ்ணனாக நடித்த சீனிவாசன் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் உயிரோட்டத்திற்குக் காரணம். ஒரு திரைப்படத்திற்கான அத்தனை சிறப்பம்சங்களையும் பெற்று, மலையாளத்தில் வெற்றிகரமாகவும் ஓடிய இப்படம் தமிழில் அதிகம் கவனம் பெறாமல் போனது வருந்தத்தக்கதே! ஆனால், அவசியம் தேடித் தேடி பார்க்கவேண்டிய, திரையிடப்பட வேண்டிய, தொலைக்காட்சி வழியாகப் பரப்பப்பட வேண்டிய படம் இது.
ஒரு டேனியலின் வாழ்க்கையும், சாதனையும் வரலாற்றில் நிறுவப்பட வெவ்வேறு காலகட்டங்களில் ஒரு கோபாலகிருஷ்ணனும், கமலும் 70 ஆண்டுகள் போராட வேண்டியிருக்கிறது. இன்னும் எத்தனை டேனியல்களின் சாதனை, ஜாதிக் கொடுமையால் மறைக்கப்பட்டிருக்கிறது _- மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மீட்டெடுக்க உறுதி பூணுதலே ஜெ.சி.டேனியலுக்கு நாம் செய்யும் மரியாதை.

Saturday, February 01, 2014

தலைமுறைகள்


மொத்தமாக 30 ஆண்டுகளில் 15 படங்கள் தான் தமிழில் இயக்கியிருக்கிறார் இதுவரை! ஆனால், தமிழ்த் திரையின் கதை சொல்லல் தரத்தை, ஒளிப்பதிவை, திரை மொழியை மாற்றியமைத்ததில் ஒளிஓவியர் பாலுமகேந்திராவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. 


கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது தலைமுறைகள். நாற்பது ஆண்டுகால திரை வாழ்வில் திரைக்குப் பின்னால் இருந்தே இயங்கி வந்த பாலுமகேந்திராவே படத்தின் முக்கியப் பாத்திரமேற்று, எப்போதும் எங்கும் சூடியிருக்கும் தலைப்பாகையைத் தூக்கி வைத்துவிட்டு, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சுப்பு பிள்ளையாக வாழ்ந்திருக்கிறார். 


தலைமுறைகளுக்கிடையிலான இடைவெளிதான் தலைமுறைகள். 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் படித்த, தமிழ் தெரியாத, பெற்றோரில்லாமல் வளர்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் பெரிய மருத்துவராகத் திகழ்கிறார் சிவராமன். அடுத்தடுத்த முன்னேற்றம், புதிய மருத்துவமனை என்று வாழ்பவருக்கு, அவரின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீடு திரும்பியிருக்கும் சேதி சற்று தாமதமாகக் கிடைக்கிறது.

அவரைப் பார்க்கச் சொல்லி மனைவி வற்புறுத்த, காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் கிராமத்திற்குச் செல்கிறார் சிவராமன். தந்தை வரவேற்க மறுத்தாலும், தங்கையின் அழைப்பின் பேரில் வீட்டில் தங்குகிறார். 

அண்ணனின் காதல் திருமணத்தின் காரணமாக தந்தை சுப்பு பிள்ளை தன்னை விரைவாக திருமணம் செய்துவைத்துவிட்ட வருத்தத்தைப் பகிர்கிறாள் தங்கை. பெண் பிள்ளை பிறக்குமா என்ற கணவனின் எதிர்பார்ப்புக்காக, மூன்று ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு நான்காவது கருவைச் சுமந்து கொண்டிருக்கும் தங்கை ஒரு புறம் என்றால், பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை என்ற ஜாதிப் பெயரையும் சேர்த்துச் சொல்லிப் பழக்கி வைத்துக் கொண்டிருக்கும் தந்தை மறுபுறம் என பிற்போக்கான மனநிலைக்குள் இன்னும் உழன்று கொண்டிருக்கும் குடும்பம் அது. 


ஜாதி, மதம் என்று பேசிக் கொண்டிருக்கும் சுப்புவுக்கு இன்னொரு மனைவி மூலமாக ஒரு மகள் இருப்பதைக் காட்டும்போது ஜாதிப் பெருமை எதுவரைக்கும் என்ற எள்ளல் இயல்பாகப் பதிகிறது. அதிலும், "வெளியில நான் சாப்பிடமாட்டேன்னு உனக்கும் உங்க அம்மாளுக்கும் தெரியாது?" என்று அண்ணன் முன்னால் எரிந்து விழும் அப்பாவைப் பார்த்து, "நல்லா தான்ணே வீட்டுல சாப்பிடுவார். இப்போ என்னமோ இப்படிப் பேசுறாரு" என்று அவள் வெட்டி ஜம்பத்தைப் போட்டுடைக்கும் காட்சி ரசிக்க வைக்கக் கூடியது. 

முதலில் மகனையே வீட்டிற்குள் விட மறுக்கும் சுப்பு, மருமகள் வந்தால் வீட்டுக்குள் சமைக்கக் கூடாது என்று மகளிடம் போடும் நிபந்தனை அவரது எதிர்ப்பு முன்பு போல் இல்லாமல் முனை மழுங்கிவிட்டது என்பதற்கு அடையாளம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பேசும் மருமகளைக் கண்டு மகிழ்ந்தாலும் 10 வயதாகியும் தமிழ் தெரியாத பேரனைப் பார்த்து வருத்தம் அடைகிறார் சுப்பு. 

மகனிடம் இருக்கும் மன வருத்தத்தையும் தாண்டி, பேரனிடம் பாசம் ஏற்படுகிறது. பேரனோடு விளையாடத் தொடங்குகிறார்; பேரனுக்குக் கற்றுக் கொடுக்கிறார்; பேரனிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்; பேரனின் கேள்விகளுக்குப் பதில் தருகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான அந்த உறவு பார்க்க அழகானது. தான் அமர்ந்து உறங்கும் சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் காலைத்தூக்கிப் போட்டபடி உறங்கும் பேரனை ரசிப்பதும், அவன் உள்ளங்கையில் வைத்திருக்கும் மிட்டாயை அவன் எழுந்துவிடாத வண்ணம் மெல்ல எடுத்துச் சுவைப்பதும் அழகு. 

ஆற்றைப் பார்த்திராத, ஆட்டைப் பார்த்திராத பேரனுக்குக் கிராமத்தின் எளிய வாழ்க்கையைப் பழக்குகிறார். தான் பண்பாடு என நினைக்கும் பழக்கங்களைப் பேரனுக்கும் சொல்லித் தருகிறார். அந்தக் காலத்து வாத்தியாராக, விஜயதசமி என்று கோவிலுக்குக் கூட்டிப் போய் நெல்லைக் கொட்டி, அதில் 'அ' என்று கைப்பிடித்து எழுத வைத்து தமிழ் கற்றுத் தருகிறார் தாத்தா சுப்பு! தனக்குத் தமிழ் கற்றுத் தரும் தாத்தாவுக்கு, நல்ல நாள் பார்க்காமல், நெல்லைக் கொட்டியோ கோதுமையைக் கொட்டியோ 'A' எழுதாமல் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்குகிறான் பேரன். அதற்குப் பிறகு தாத்தா கற்றுக் கொடுத்த அவை சிறுநீர் கழிக்கையில் மணலில் வரைந்து பார்க்கும் பேரனைப் பார்க்கும் போது, அய்யய்யோ வருத்தம்-கிருத்தம் படப்போகிறாரோ என்று நாம் நினைத்தால், அதற்கு மாறாக காவி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு பேரனைப் போலவே தாத்தாவும் சிறுநீரில் 'அ' வரைந்து பார்ப்பதும், அதைப் பேரன் 'ரொம்ப ஷேக்கிங்' என்று சொல்வதும் இரண்டாம் குழந்தைப் பருவத்தைப் பதிவு செய்யும் காட்சிகள். ஆற்றில் குளிக்கப் பழக்குவது, தூண்டிலிட்டு மீன் பிடிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது என்று இன்றைய நகர வாழ் குழந்தைகள் தவறவிட்ட தருணங்களை நினைவூட்டுகிறது தலைமுறைகள். தாய்ப்பால் காட்சியையெல்லாம் எந்த இடையூறும் இல்லாமல் வெகு அழகாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.


மகள் வயிற்றுப் பேரன்களுக்கெல்லாம் "சிவகுருநாதன் பிள்ளை, சிவ... பிள்ளை, சிவ... பிள்ளை" என்று பேர்வைத்து ஜாதியோடு சொல்லப் பழக்கியவர் மகன் வழிப் பேரனுக்கும் "ஆதித்யா பிள்ளை" என்று சொல்லித் தருகிறார். அந்தப் பேரைச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான் பேரன் ஆதித்யா. "இந்த ஜாதி மதப் பிரிவினைக் குப்பையெல்லாம் நம்மோடவே போகட்டுமே! அடுத்த தலைமுறைக்கும் போகணுமா?" என்று பாதிரியார் எழுப்பும் கேள்விக்குப் பிறகு, தானும் அதை விட்டுவிடுகிறார் சுப்பு. 

ஒரே தடவையில் திருந்திவிட்டாரா என்று சிலர் விமர்சனத்தில் கேட்டிருந்தார்கள். இந்தக் கேள்வியை ஒருமுறை கூட யாரும் கேட்காமலேயே பலருக்குக் காலம் கடந்துவிட்டிருக்கிறதே, ஒருவரின் கேள்வி கூட சுருக்கெனத் தைக்கலாம். கிறிஸ்துவ மருமகள் எட்டுக் கிலோமீட்டர் நடந்து சர்ச்சுக்குச் சென்று வர வேண்டுமா என்று யோசித்து, தான் வணங்கும் கடவுள்களுக்கு மத்தியிலேயே ஏசு படத்தையும் வைத்து, மற்ற கடவுளரைப் போலவே பூமாலையும் போட்டு வைக்கும் அளவுக்கு சுப்புவின் மனநிலையில் பாசம் மாற்றத்தை உண்டாக்குகிறது. வயதான காலத்தில் நிகழும் மாற்றங்கள் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியாது. யாராலும் அடங்காதவர்கள் பேரனுக்காக மாறும் இயல்புகளைத் தனியே விவரிக்க வேண்டியதில்லை. வெகு இயல்பாக இவற்றையெல்லாம் பதிவு செய்கிறார் பாலுமகேந்திரா. 


கம்பீரமான தோற்றத்துடன், வீராப்புடன் திகழ்வோரெல்லாம், கால மாற்றத்தில் புதியன அறியாதவர்களாக, வயதான காலத்தில் வெகு குழந்தைகளாக மாறிப் போவதைக் கண்டிருப்போம். சுப்பு கதாபாத்திரத்திற்கு இது சரியாகப் பொருந்தும். சுப்பு என்ற கதாபாத்திரத்தைத் தாண்டி பாலுமகேந்திராவை நாம் ஒரு வேளை தேடிக் கண்டுபிடித்தோமானால், அவரின் நடிப்பு எத்தனை இயல்பாக இருக்கிறது என்பதையும் நாம் உணரமுடியும். கையைக் கையை ஆட்டிப் பேசும் பாவனைகளில் சில நேரம் செயற்கைத்தன்மை இருப்பதாக நமக்குத் தோன்றலாம்; ஆனால் மூத்தோரை மனதில் வைத்துப் பார்த்தால் சுப்புவின் பாவனைகள் நமக்குத் தனித்துத் தோன்றவில்லை.


சென்னையில் விட்டுவந்த மருத்துவப் பணியைத் தொடர விரையும் மகன் சிவராமன், கிராமத்து மக்களுக்கும் மருத்துவமனை தேவை; அதற்கு, தானே இங்கிருந்து நடத்தத் தயார் என்று சொல்லும் மருமகள் போன்ற முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், ”உங்க கல்யாணத்துக்குக் கையெழுத்துப் போட்டேன்னு எப்பவும் திட்டுவாரு.. இப்போ பார்த்தாலும் திட்டுவார்” என்று மறைந்து மறைந்து ஓடும் சிவராமனின் நண்பன், சுப்புவின் நண்பர் லட்சுமணன், இரண்டாம் மனைவியின் மகளாக வரும் சிறுமி என்று அவ்வப்போது வரும் கதாபாத்திரங்களும் இயல்பானவை _- நம் குடும்பத்தைப் போல! 

ஆங்காங்கே காட்சிகள் கோர்வை இல்லாமல் இருப்பது உறுத்தல்தான். அப்படிக் கோர்வையற்ற ஒரு காட்சித் திணிப்புதான்- கடவுள் பற்றி அவர் பேரனுக்குக் கூறும் காட்சியும். ஆற்றங்கரை வழியில் இருக்கும் பிள்ளையார் சிலையை கடவுள் என தாத்தா அறிமுகப்படுத்த, "இல்லை அது கல்லுதான்" என்கிறான் பேரன். அடுத்த காட்சியிலேயே சம்பந்தமில்லாமல், "தாத்தா என் போட்டோ" என்று ஒரு படத்தைக் கொண்டு வந்து காட்டும் பேரனிடம் இது நீயில்லை; வெறும் பேப்பர் என்று வாதாடுகிறார் தாத்தா. காட்சி நிறுத்தப்பட்டு, வளர்ந்துவிட்ட பேரனின் குரலில் "கண்ணதாசனின் தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான் என்ற வரிகளுக்கு எனக்கு ரொம்ப காலம் கழிச்சுத்தான் அர்த்தம் புரிஞ்சுச்சு" என்று ஒரு வசனம். "என் போட்டோ" என்றும் "போட்டோவிலிருப்பது என் உருவம்தான்" என்றும் கூறும் பேரனிடம் "இது நீயில்லை" என்று நிறுவப் பார்க்கிறார் பாலுமகேந்திரா. கல்லைக் கடவுளென்றும் அதற்குச் சக்தி உண்டு என்றும் நம்பச் சொல்வதைப் போல, அந்த போட்டோதான் சிறுவன் என்பது வாதமில்லையே! போட்டோவை தங்கள் உருவத்தின் பிரதிபலிப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர, அதுதான் தாம் என்று யாரும் பார்க்கவில்லை. கடவுள் விசயத்தில் பாலுமகேந்திராவின் இந்தப் பதட்டத்தை நாமும் ஓரிரு நிகழ்ச்சிகள் மூலம் அறிந்திருப்பதால் இந்தத் திணிப்பை நம்மால் உணரமுடிகிறது. அது அவசியமில்லை என்பதை அந்தக் காட்சியே உணர்த்தும். 

தேவையான அளவு, தேவையான இடத்தில் இசை. அதற்குப் பெயர் தான் இளையராஜா. மென்மையோடு நாம் பார்த்த பழைய பாலுமகேந்திரா படங்களுக்கு குளிர் பின்னணியும், பிலிமும் காரணமாக இருந்தன. இந்தப் படத்தில் டிஜிட்டலில் படமாக்கியிருப்பதால் வெளிறித் தெரியும் சில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் நெருடலின்றி இயல்பான ஒளியமைப்புடன் கண்ணுக்கு இதமளிக்கிறார் பாலுமகேந்திரா. 

முற்போக்கான படம் என்றோ, அனைவருக்கும் அவசியமான கருத்துகளைத் தந்திருக்கும் படம் என்றோ நம்மால் இதைச் சொல்ல முடியாதுதான். ஆனால் முன்னேற்றத்தை முடக்கிவிட்டு, கிராமத்தில் முடங்குங்கள் என்று இந்தப் படம் சொல்லவில்லை; நவீன வாழ்க்கை முறையை நோக்கி விரல் நீட்டி குற்றமும் சாட்டவில்லை; வேர்களை மறந்துவிடாதீர்கள் என்று மட்டும்தான் வேண்டுகோள் விடுக்கிறது. வேர்கள் என்பது கிராமம் என்ற இடம் அல்ல; அங்கிருக்கும் மனிதர்கள் என்பதையும் படம் காட்டிச் செல்கிறது. 

ஜாதியைப் பாதியில் விட்டுவிட்ட சுப்பு, தன் கடைசி வேண்டுகோளாக தமிழை மறந்துடாதே; இந்தத் தாத்தாவையும் மறந்துடாதே என்று கோருகிற இடத்தில் படம் அதற்கான முக்கியத்தைப் பெறுகிறது. வணிகம் குறித்துப் பெரிதும் கவலைப்படாமல் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் சசிக்குமார் பாராட்டுக்குரியவர். திரை மொழியை நன்கு பயன்படுத்தத் தக்க அண்மைக் காலத்துக் கலைஞர்களெல்லாம் பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர்கள்தான். அதன் அடுத்த கட்டத்திற்கு இப்படம் இட்டுச் செல்லும். திரைப்படம் என்ற பார்வையில் ஆரவாரம் இல்லாமல், வணிகச் சமரசமில்லாமல், எளிமையாக இனிவரும் படங்களுக்கு இது முதல் தலைமுறை; தொடக்கம்; முதல் நெருப்பு. திரைப்படங்களை ரசிப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படைப்பு!

Thursday, June 14, 2012

வயசுப் பிள்ளைகளோடு பெற்றோரும் பார்க்க வேண்டிய வழக்கு எண் : 18/9


தப்பித்தவறி ஒரு நல்ல படம் வந்துவிட்டால், அதை மக்கள் ரசித்து வெற்றி தந்துவிட்டால், அதைத் தொடர்ந்து அது டிரண்ட் என்று உருவாகி எங்கே நமது கமர்சியல் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு உண்டு. திடீரென்று நடிகர்கள் நல்ல படங்களில் நடிக்கத் தொடங்கி அது தொடர்ந்து விட்டால் என்னாவது? நமக்குத் தெரிந்த மசாலாக்களை எப்படி மக்கள் மண்டையில் அரைப்பது என்ற கவலையெல்லாம் அவர்களை வாட்டி வதைக்கும். அதனால் தான் 1987களில் ரஜினியும், கமலும் நல்ல படங்களைத் தேடி கொஞ்சம் நகர்ந்த பொழுதும், பின்னாளில் விக்ரம் அது போல் செய்யத் தொடங்கியபோதும் தெளிவாக அவர்களை கமர்சியல் பக்கம் நகர்த்தி வைத்துக் கொண்டது. இந்தச் சதிச் சிந்தனையின் கோரத்தை நம்மால் வழக்கு எண் 18/9  திரைப்படத்தின் மீதான கருத்துப் பரப்பலில் புரிந்துகொள்ள முடிந்தது. மாற்றுசினிமாவை நோக்கிய தடத்திலும், மக்கள் ரசிக்கத்தகுந்த சில இனிப்புகளைத் தடவி தெளிவாக மக்களைச் சேரும் விதத்தில் வழங்குவதிலும், அதனையும் மிகக் குறைந்த செலவில் படமாக்கிக் காட்டுவதிலும் திறமையோடிருக்கும் பாலாஜி சக்திவேலின் மீதும், அவரது படைப்புகளின் மீதும் அத்தனை வன்மம் இருக்கிறது திரைப்படத்தைக் கலையாகப் பார்க்காத தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு!

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இப்படம் ஒன்னும் விக்கல போலிருக்கே..., தேறலையாமே, படு மோசமா இருக்காம்.. சுத்தமா தேறலையாம் செகண்ட் ஹாஃப்.. காசை வீணடிச்சிட்டாங்க என்றும், படம் வெளிவந்து மக்கள் வரவேற்பைப் பெற்ற பிறகும் கூட அதெல்லாம் ரொம்ப நாள் ஓடாதுங்க... என்றும் இவர்கள் செய்த பிரச்சாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் கூடப் பார்க்க முடியாது. இந்த வியாபாரிகள் வீசிய சேறுகளையெல்லாம் பற்றி கவலைபடாமல் தன் பாணியில் பிறருக்கும் வழிகாட்டும் வண்ணம் படம் தந்திருக்கிறார் வழக்கு எண் 18/9 -ன் இயக்குநர்.
*****
அன்றாடம் செய்தித்தாள்களில் பார்ப்பதனால் கிட்டத்தட்ட சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்ட செய்திகளைத் தான் உறைக்கும்படி சொல்லியிருக் கிறார் பாலாஜி சக்திவேல். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றினுள் ஆசிட் வீச்சினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஓர் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படுகிறாள். அவளுக்கு சிகிச்சை நடந்துகொண்டிருக்கும் அதே நேரம் அப்பெண்ணின் தாயாரிடம் விசாரணை செய்கிறது காவல்துறை. பிளாட்பாரக் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் தான் அடிக்கடி தன் பெண்ணிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறான் என்று அந்த பெண்ணின் தாய் சொல்ல, அவனை மெதுவாக அழைத்து விசாரிக்கத் தொடங்குகிறது போலீஸ். நடந்தது என்னவென்றே தெரியாத வேலு என்ற அந்த இளைஞன் தன் வாழ்க்கையைச் சொல்ல படம் விரிகிறது.

பிளாட் போட்டு விற்கப்பட்டுவிட்ட விவசாய நிலங்களுக்கு மத்தியில்,  கடன் வாங்கி விவசாயம் செய்து நட்டப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயியான தன் தந்தையின் கடனை அடைப்பதற்காக குழந்தைத் தொழிலாளியாக வட இந்தியாவில் பணியாற்றியவன் வேலு. பெற்றோர் இறந்த தகவலும் கூட தன்னிடம் மறைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை அறிந்து அங்கிருந்து தப்பி, சென்னை வந்து சேர்கிறான். ஒரு பாலியல் தொழிலாளியின் உதவியுடன் தெருவோர சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்து அங்கேயே தங்கி, தன் பிழைப்பை நடத்தும் வேலுவுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீட்டுவேலைக்குச் செல்லும் இளம்பெண் ஜோதிக்கும் நிகழும் யதார்த்தமான மோதலும், பின்னர் ஜோதியின் நற்குணம் கண்டு வேலுவுக்கு ஒரு தலையான காதலும் உருவாகிறது. எதற்காக அழைக்கப்பட்டோம் என்றே தெரியாமல் தன்னுடைய வாழ்க்கையை காவல்துறை விசாரணையில் சொல்லிவிட்டு வேலு காத்திருக்க, அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பள்ளி மாணவி ஆர்த்தி, இவ்வழக்கு தொடர்பாக, தான் சொல்ல வேண்டியிருப்பதாகக் கூறி சில தகவல்களைச் சொல்லுகிறாள்.

இப்போது கதை பன்னிரண்டாம வகுப்புப் படிக்கும் ஆர்த்தி, அவள் இருக்கும் குடியிருப்பில் வசிக்கும் மற்றொரு இளைஞன் தினேஷ் ஆகியோரை மய்யப்படுத்திச் செல்கிறது. தனியார் பள்ளி உரிமையாளரான பெண் ஒருவரின் மகன் தினேஷ், தனது பகட்டு, பணக்காரத்தனம் இவற்றைக் காட்டியும், செல்போன் பரிசளித்தும் ஆர்த்தியை மடக்க முயற்சிக்க, உடன் படிக்கும் வட இந்திய மாணவியோ, "பணக்காரப் பையன்னு சொல்ற... இப்போதைக்கு ஓகே சொல்லு.. பிடிச்சிருந்தா கண்டினியூ பண்ணு... இல்லைன்னா கட் பண்ணிடு" என்று அவனைக் காதலிக்கச் சொல்லி தூண்டிவிட்டும் மாட்டாமலிருக்கிறாள் ஆர்த்தி. பின்னர் தனிமையில் கடற்கரைக்கு அழைத்துச் சென்று, தான் நேர்மையானவன் என்பது போல் தினேஷ் செய்யும் பாவனைகளில் மயங்கும் ஆர்த்தி, தானும் காதலிப்பதாகச் சொல்ல யத்தனிக்கிறாள்.  அப்போது தினேஷின் செல்பேசியில் தான் ஆபாசமாகப் படம் பிடிக்கப்பட்டிருப்பதும், அதேபோல் பல காட்சிகள் இருப்பதையும் கண்டு நடுங்கி, அவனிடமிருந்து உடனடியாக விலகுகிறாள். அவளிடம் தன்னுடைய செல்பேசியின் நினைவு அட்டை மாட்டி விட்டதையும், தன்னைப் பற்றி அவள் தெரிந்து கொண்டுவிட்டாள் என்பதையும் உணரும் தினேஷ் அவளைக் கொல்ல முயற்சிக்கிறான். ஓரிரு முயற்சிகளில் அவள் தப்பிவிட, ஆசிட் வீசி தாக்குகிறான். இந்தத் தாக்குதலில் தான் ஆர்த்திக்கு பதிலாக தவறுதலாக ஜோதி மாட்டிக் கொள்கிறாள்.
இந்தத் தகவல்களை ஆர்த்தி காவல்துறையிடம் விவரித்து தினேஷ் தான் உண்மைக் குற்றவாளி என்பதை எடுத்துக் கூறுகிறாள். ஆனால் அரசியல்வாதிகளின் அனுசரணையும் பணமும் படைத்த தினேஷின் அம்மாவிடமிருந்து பணத்தைக் கறந்து, தினேஷை விடுவிக்கத் திட்டமிடுகிறார் காவல்துறை அதிகாரி குமரவேல். ஜோதிக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலைக் கண்டு கதறும் வேலுவிடம், ஜோதிக்கு மருத்துவம் செய்ய ஆகும் செலவை தினேஷிடமிருந்து தான் பெற்றுத் தந்து அவளைக் குணப்படுத்துவதாகவும், அதற்குப் பிரதிபலனாக குற்றத்தை வேலு ஒப்புக் கொள்ளவேண்டும் என்று நயவஞ்சகமாகப் பேசி வேலுவைக் குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பிவிடுகிறார் காவல்துறை அதிகாரி.
தமிழ் சினிமாவின் கமர்சியல் படங்கள் என்று சொல்லப்படுவனவற்றிற்கு ஏற்ற கதை. ஒன்றுக்கு இரண்டாகக் காதல். அதுவும் இளமை துள்ளும் பள்ளி வயதினரின் காதல். போதாக்குறைக்கு செல்பேசியில் ஆபாசப்படம், கிளுகிளு எம்.எம்.எஸ். என்று கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாத கதைக் களம். இதை வைத்துக் கொண்டு அள்ளிவிடலாம் காசை! அவிழ்த்துவிடலாம் அனைத்தையும்! அதற்குக் காரணம் இருக்கவே இருக்கிறது கதையில்! கதைக்கு தேவையென்றால் நான் எப்படியும் நடிப்பேன் என்று நடிகையையும் பேச வைத்து விளம்பரம் செய்துவிடலாம். இத்தனை வசதிகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற இடத்தில் தான் முழுநிறைவான கைத்தட்டலைப் பெறுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அவரது இந்த முயற்சிக்கு தன்னுடைய முதலைப் போட்டு, பொறுமையாகக் காத்திருந்து நல்ல படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நிச்சயம் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களைச் சொல்லவேண்டும். ஒரு படத்தில் சமூகத்திற்கு தேவையான இத்தனை செய்திகளா? பட்டா போடப்படும் விவசாய நிலங்கள், கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் அவலம், குழந்தைத் தொழிலாளர் கொடுமைகள், அழிந்து வரும் கூத்துக்கலை, நசிந்து வரும் கூத்துக் கலைஞர்கள்,  இளம் பிராயத்தினரின் பாலியல் ஈர்ப்பு, கையில் செல்பேசியுடனே அலையும் பிஞ்சுகளின் மனதில் தோன்றும் விபரீதம், செல்பேசி அவசியம் எனக் கருத வைக்கும் உலகமயமாக்கல் உருவாக்கியிருக்கும் நடுத்தரவர்க்க மனநிலை, காதல் என்ற கவர்ச்சியான வார்த்தை, அது உருவாக்கும் மாயத்தோற்றம், தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளை, அரசியல் ஆதிக்கம், எளிய மக்களின் மீது பொய் வழக்குகளப் போட்டு அவர்களைக் குற்றவாளிகளாக்கும் காவல்துறையின் கேடுகெட்ட போக்கு... இன்னும் துளித்துளியாய் நறுக்கென்று ஊசி போல் எத்தனை செய்திகள்! ஆனால் இதில் எதுவும் திணிக்கப்பட்டது போல் தெரியாமல், கருத்து சொல்வது போல் அமையாமல் வெகு இயல்பாக நம் மனதில் பதியவைக்கும் வண்ணம் உருவாக்கியிருப்பதில் தெரிகிறது திரைக்கதையின் வலு. பள்ளிக் கொள்ளை பெண்ணின் அறையில் பின்புறத்தில் இருக்கும் சாமியார் நித்தியின் படம் மங்கலாகக் காட்டப்பட்டாலும், ஒரே புகைப்படத்தை வைத்து அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்திவிட்டார்கள். காதலை மறுக்கும் பெண்ணா? அடிறா அவள... உதை டா அவள.. விட்றா அவள... என்றோ, வேணாம் மச்சான்... வேணாம் இந்த பொண்ணுங்க காதலு... என்றோ தண்ணியடித்து திட்டிவிட்டு மட்டையாவதும், ஒய் திஸ் கொலவெறி என்று பெண்ணின் மீது குற்றங்களைச் சுமத்தித் திரிவதும் பெண்களைக் காயப்படுத்தி இளைஞர்களைக் குஷிப்படுத்த, (வேறு வழியில்லாமல்) திரைத்துறையினர் செய்யும் மினிமம் ஆசிட் வீச்சுகள். ஆனால் தமிழகத்தின் அன்றாட செய்திகளில் காதலை மறுத்த பெண்ணுக்குக் கத்திக்குத்தி, கழுத்தறுப்பு, ஆசிட் வீச்சு என்று வருபவை எல்லாம் கொஞ்சம் சீரியஸ் அட்டெம்ப்ட், அவ்வளவுதான். மற்றபடி இவற்றுக்கும் அவற்றுக்கும் என்ன வித்தியாசம்? காதலிப்பதும், காதலை மறுப்பதும் ஏன் என்பதையோ, அது தனிப்பட்ட விருப்பம் என்பதையோ, அதற்கான காரணிகள் குறித்தோ என்றுமே தமிழ் சினிமா பேசியதில்லை. அவற்றை நாமும் இளைஞர்களுக்கு சொல்லித் தருவதில்லை. இப்போதெல்லாம் 25, 30 வயதினரின் காதல், கல்லூரிக் காதல்கள் கூட சொல்லபப்டுவதில்லை படங்களில். அதெல்லாம் பழையதாகிவிட்டது.
பள்ளிக் காலத்து காதல் தான்! அது ஏற்படுத்தும் விளைவு எப்படியிருக்கும் என்பதை நாம் செய்திகளின் வழியாக உணரமுடிகிறதல்லவா? இந்த அவலங்களையும், அது குறித்து நாம் கொள்ள வேண்டிய கவலைகளையும் தான் எடுத்துக் காட்டுகிறது இந்தப் படம். மண்ணின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன். மண்ணின் மைந்தர்களைப் பதிவு செய்கிறேன் அந்தந்த பகுதிகளின் உயர்ஜாதி என்று தங்களை நம்பிக் கொண்டிருப்போரின் வாழ்க்கை தான் இது வரை தமிழ் சினிமாவில் பதிவுசெய்யப்பட்டி ருக்கிறது. அதேபோல சென்னையைப் பதிவு செய்கிறேன்.. வட சென்னை மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறேன் என்று வெறும் கத்தி, கபடா, சைக்கிள் செயின் அளவிலான கழுத்துச் சங்கிலிகளைப் பதிவு செய்துவிட்டு, சென்னை மீதான பயத்தைத் தோற்றுவித்திருக் கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். ஆனால் அவர்கள் பதிவு செய்யத்தவறியது சென்னையில் அருகருகே அமைந்திருக்கும் இரு வேறுபட்ட மக்களின் வாழ்நிலை. பிளாட்பார வாழ்க்கை என்பது சென்னையின் மிக முக்கியமான அங்கம். தமிழகத்தின் ஏதேதோ பகுதிகளிலிருந்து வேலைக்காக வந்து, பிளாட்பாரங்களையே வசிப்பிடமாகக் கொண்டவர்களும், அதே பிளாட்பாரங்களையொட்டியே பளிங்கு மாளிகைகளுக்குள் சொகுசாக வாழ்பவர்களும் நிறைந்த விசித்திரக் கலவைதான் சென்னை. தனது காதல் திரைப்படத்தில் மதுரையினை வெகு இயல்பாக பதிவு செய்த இயக்குநர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்: 18/9 சென்னையின் இந்த விசித்திரக் கலவையைப் படமாக்கியிருக்கிறது. ஆனால் கடந்த படத்தைப் போலவே களத்தைப் பதிவு செய்தல் என்பது இயக்குநரின் முக்கியமான குறிக்கோளாக இல்லாவிட்டாலும், இயல்பான கதையோட்டத்தினாலும், அதற்கேற்ற பின்புலங்களைத் தெளிவாக உருவாக்கியிருப்பதாலும் தானாகவே களம் சரியாகப் பதிவாகிவிடுகிறது.
திரைப்படம் என்றாலே பலமுறை பார்த்த முகங்களுக்குள் புதிய கதாபாத்திரங்களைப் பொருத்திக் கொண்டு பார்க்கும் கஷ்டம் இருக்கும். ஆனால் நாயகன், நாயகி தொடங்கி படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் புதுமுகங்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திறம்பட நடிக்கவும் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகரும் அவர்களுக்குரியதை தெரிந்து செய்திருக்கிறார்கள். குறிப்பாக கூத்துக் கலைஞன் சின்னச்சாமியாக வரும் சிறுவன், இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஜோதியின் தாய், பாலியல் தொழிலாளி ரோஸி என்று துணைக் கதாபாத்திரத் தேர்விலும் அத்தனை நேர்த்தி. படத்தை இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகளோடு டிஜிட்டல் முறையில் தெளிவாக பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன், உறுத்தாத பாடலையும் பொருத்தமான பின்னணி இசையையும் வழங்கிய பிரசன்னா ஆகியோரோடு, படத்தொகுப்பாளராக அறிமுகமாகியிருக்கும் கோபி கிருஷ்ணாவும் படத்தின் மிரட்டலான புதுமையான ஆக்கத்திற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். பாலாஜி சக்திவேல் என்ற இந்த இயக்குநரின் மீது தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. காதலைக் கொண்டாடியவர்கள் இந்த வழக்கு எண்ணையும் நம்பிக்கையோடு எதிர் கொண்டார்கள் என்பதைத் தான் இப்படத்தின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. நல்ல படங்களைத் தர போராடலாம்; காலம் எடுத்துக் கொள்ளலாம்; மக்கள் காத்திருப்பார்கள் என்பதை நமது படைப்பாளிகளுக்கும் இப்படம் சொல்கிறது.
ஊருக்கு உழைச்சு உழைச்சு வீணாப்போனது தான் மிச்சம் என்று ஜோதியின் தந்தை குறித்து அவளது தாய் சலித்துக் கொள்ளும்போது, தந்தையின் படத்துக்கருகில் கம்யூனிசப் புத்தகங்கள் காட்டப்படுகின்றன. இது எதற்கு என்று தொடக்கத்தில் ஒன்றும் புரியாதவர்களுக்கு, கடைசியில் ஜோதியின் செயலுக்கு அடிப்படை உணர்வான போராட்ட குணத்துக்குக் காரணம் இதுவே என்பதை உணர்த்துவதும் இயக்குநரின் சிந்தனையை நமக்குக் காட்டுகிறது. அதைவிட இன்றைய சூழலில் ஏன் முற்போக்குக் கருத்துகளும், போராட்ட உணர்வும் அடித்தட்டு மக்களுக்கு அவசியமாகிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பதின் பருவத்தில் இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் இவ்விசயங்களைப் பேசத் தயங்கும் பெற்றோர் இருக்கும் நம் சமூகத்தில் அவசியம் அழைத்துச் செல்ல வேண்டிய படம். இனிமேலாவது அத்தகைய மௌனங்களைக் கலைத்து விட்டு அவர்களிடம் இயல்பாகப் பேசிட வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அதன் அவசியத்தை உணர்த்தும் படம்.

Tuesday, December 14, 2010

அடக்கப்பட்ட மக்களின் அரிமா


இந்தியாவின் தனித்தன்மை என்று பார்ப்பனர்களால் பெருமையாகவும், சமூக விஞ்ஞானிகளால் பெருங்கொடுமையாகவும், அநீதியாகவும் சுட்டிக் காட்டப்படுவது தான் வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஜாதிமுறை. புத்தர் தொடங்கி இன்றைய காலம் வரை வர்ணாஸ்ரமத்திற்கும், ஜாதிக்கும் எதிரான போராட்டம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் பக்கங்களில் இவரின் பங்களிப்பு ஒரு புரட்சியின் வீச்சு. ஆரிய சனாதனத்தையும், அது அமர்ந்திருந்த அதிகாரப் பீடத்தையும் ஆட்டம் காணச் செய்த பேரிடி!  அடிமை வாழ்வைத் தகர்க்க, அரசியல் அதிகாரத்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை இந்திய மண் எங்கும் பரப்பிய பெரு நெருப்பு!


மாபெரும் திறமைசாலிகள் என பூணூல் படர்ந்த தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் பார்ப்பனக் கூட்டத்திற்கிடையில், தன் தனிப்பெரும் ஆற்றலால் இந்திய அரசியல் சாசனத்தை வடித்த சிற்பி! ஓரளவுக்கேனும் மனித உரிமைக்கும், கருத்துரிமைக்கும் இந்திய அரசியல் சட்டம் வாய்ப்புத் தருகிறதெனில் அது அவரின் பங்களிப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று! தானே வடித்த அரசியல் சட்டமாயினும், அது சரியாகச் செயல்படுவதும், தவறாகப் பயன்படுவதும் ஆள்வோரின் கைகளில் தான் இருக்கிறது என்பதை நேர்மையின் உறுதியோடு அறிவித்தவர்! ஆளும் பார்ப்பனியக் கும்பலால் அதே சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரானதாக மாறும் போது அதைக் கொளுத்துவதிலும் முதல் ஆளாய் நான்தான் இருப்பேன் என்று அவர் அறிவித்த போதும் அதே அரிமாவின் கர்ச்சனை! நினைத்ததைச் செய்ய முடியாத போது இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையையும் உதறி எழுந்து, மக்களையும் தட்டி எழுப்பிய கதிரவன்! அவர் தான் ”வடநாட்டுப் பெரியார்” என்று வரலாற்றால் பெருமையோடு அழைக்கப்படும் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்!

அம்பேத்கரின் புகைப்படத்தை மட்டும் காட்டி, அவரை தங்களில் ஒருவராக செரிக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துத்துவ சதிக்கு நடுவில், அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, ஜாதிக்கெதிராகத் திரண்டெழுந்து அதை ஒழிக்க முரசு கொட்டி நின்ற அவரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு கொண்டுசெல்லக் கிடைத்த பேராயுதம் தான் ”அம்பேத்கர்” திரைப்படம். தேசிய திரைப்பட வளர்ச்சிக் குழுமத்தின் தயாரிப்பில் ஜபார் பட்டேலின் இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ”டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2010 டிசம்பர் 03-ஆம் தேதி வெளிவந்துள்ளது. அம்பேத்கர் (தமிழ்) திரைப்படத்தின் வெளியீடே ஒரு பெரும் போராட்டத்தின் பின்னான வெற்றியாகும். அவ்வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது நன்றிகள் உரித்தாகும்.


படிப்பெல்லாம் உங்களுக்கு ஏறாது.. அறிவுக்கும் உங்களுக்கும் ஆயிரம் காதம் தொலைவு என்றும், சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் படிப்பைக் கொடுக்காதே என்றும் தீண்டப்படாத குலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களிலிருந்து கிளர்ந்தெழுந்த அறிவுக் கதிரவனாம் அம்பேத்கரின் படிப்பு, அறிவுத்தேடலுக்கான அமெரிக்க வாழ்க்கையோடு தொடங்குகிறது அம்பேத்கரின் வரலாறு. அதற்கு முந்தைய காட்சியிலும், ஓவியங்களின் வாயிலாகவும் ஜாதிக் கொடுமையால் மக்கள் பட்ட அவதியைத் தெளிவாகக் காட்டிவிட்டுத்தான் தொடங்குகிறது படம். படிப்பு முடிந்ததும் பரோடா அரசில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையோடு கூடிய அவ்வரசின் நிதியுதவியில் பொருளாதாரத் துறையிலான தன் படிப்பையும், ஆய்வையும் மேற்கொண்டிருக்கும் அம்பேத்கரின் கடினமான உழைப்பையும், அறிவாற்றலையும் வியப்புடன் நோக்குகிறார்கள் உடன் பயில்வோரும், பேராசிரியர்களும். அங்கே கருப்பர்களுக்கெதிரான அநீதியைக் காணும் அம்பேத்கர், இந்தியாவில் ஜாதியின் பெயரால் இதனினும் கொடுமையான சூழல் இருப்பதைத் தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 

இதற்கிடையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறும், அமெரிக்காவில் இருந்தபடி அதற்குக் குரல் கொடுக்குமாறும் மாணவர் அம்பேத்கரைத் தனிப்பட்ட முறையில் லாலா லஜபதி ராய் அழைக்கிறார்.  தன் படிப்பைக் காரணம் காட்டியும், இந்திய சுயராஜ்ஜியம் எவ்வளவு முக்கியமோ, அந்தப் போராட்டத்தை விடக் கடுமையான போராட்டத்தை ஜாதி ஒழிப்புக்கும், வர்ணாசிரம ஒழிப்புக்கும் நடத்த வேண்டும் என்ற தனது உணர்வாலும் ராயின் அழைப்பை மறுக்கிறார் அம்பேத்கர். 

அம்பேத்கரின் சிந்தனைப்போக்கு அங்கேயே தெள்ளெனத் தெரியத் தொடங்குகிறது. படிப்புக்கும், குடும்பத்துக்குமாக தொடர்ந்து நடக்கும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில் தனது இளமைக்காலத்தில் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் பெற்ற அவமானமும், கொடுமைகளும் அம்பேத்கரின் மனதில் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தின் தேவையை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. உதவித் தொகை நின்று மீண்டும், இந்தியா திரும்பியதும், பரோடா அரசுப் பணியில் அவர் சந்திக்கும் சவால்களும், படித்த, அறிவுள்ள ஒருவனுக்குத் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் என்ற ஒரே காரனத்தினால், இந்து மதத்தினராலும், பிற மதத்தினராலும் இழிவுபடுத்தப்பட்டு, வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளும் மறுக்கப்படுவதிலும், அவரது உறுதிப்பாடு பன்மடங்காகிறது.

பின்னர் சாகு மகராஜின் உதவியால் தன் மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்து, வழக்கறிஞராகவும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டத்தில் பத்திரிகை தொடங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போராட்டக் களம் அமைத்து, சட்ட ரீதியாகப் போராடுதல் என அவரின் பணி வேகமெடுக்கிறது. மகர் குளத்தில் அனைத்து மக்களும் குடிநீர் பருகலாம் என்ற அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையோடு அவர் மக்களைத் திரட்டிக் களம் இறங்குவதும், பின்னர் ஆலய நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் போது கூட, “ஆலய நுழைவை விட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெறுவது தான் நமது முக்கிய நோக்கம்” என்று தெளிவாக அரசியல் ரீதியாகப் போராடுவதும் மிகச் சிறப்பாகப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.


இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் காந்தியும் காங்கிரசும் செய்த துரோகங்களையும், வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியின் மனோபாவத்தையும் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கிறது படம். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி வழங்குவது என்ற அம்பேத்கரின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசு ஏற்படுத்தித் தந்த வாய்ப்பையும், உண்ணாவிரதம் என்ற பெயரில் சூழ்ச்சி செய்து காந்தியார் பறித்த துரோக வரலாற்றை படம் மிகத் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அம்பேத்கரின் உறுதிப்பாட்டை ஆதரித்தும், காந்தியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது என்று வலியுறுத்தியும் ”காந்தியின் உயிரை விட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையே மேலானது” என்று இந்தியாவிலேயே தனி மனிதராகக் குரல் கொடுத்து, அம்பேத்கருகுக் கரம்கொடுத்த தந்தை பெரியாரின் பங்களிப்பை படத்தில் நம்மால் காணமுடியவில்லை. அம்பேத்கர் தனி மனிதரல்ல.. அவருக்குப் பின்னால் மக்கள் மட்டுமல்ல... மாபெரும் படையின் தலைவராம் பெரியார் என்னும் பேருரு இருந்தது என்பதைப் பதிவு செய்தல் எவ்வளவு முக்கியமானது. அதை செய்யத் தவறியிருப்பது ஒரு வரலாற்றுப் பிழையே! 

ஆயினும், அம்பேத்கரின் எழுத்துகளே பெரும்பாலும் வசன வடிவம் பெற்றுள்ளதால் ஒவ்வொரு வசனமும் ஆயிரம் முறை உரத்துச் சொல்ல வேண்டிய கருத்துடையனவாகும். திரைப்படம் எனும் போது முழு வாழ்க்கை வரலாற்றை மூன்று மணிநேரத்திற்குள் செறிவாகக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் இயக்குநர் ஜாபர் படேல். ”அடடா... அம்பேத்கர் இவர் தானோ!” என்று வியக்கும் வகையில் ஏற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார் மம்முட்டி. அவரது தோரணைகளாலும், பார்வைக் கோணங்களாலும், சமூக அநீதியைக் கண்டு தெறிக்கும் விழிகளாலும் அப்பப்பா.... அம்பேத்கரை நேரில் பார்த்த உணர்வைப் பெற முடிகிறது.  கலை இயக்கம், ஒளிப்பதிவு எனத் தேர்ந்த கலைத் தன்மை கொண்டதாகவும், அம்பேத்கரின் மனைவி ரமாபாயின் கதாபாத்திரம் ஏற்ற சோனாலி குல்கர்னி, காந்தியின் சூழ்ச்சிப் பார்வையை மிகச் சரியாகப் பொருத்தி நடித்த நடிகர் என தேர்ந்த நடிகர்களாலும், பன்னாட்டுத் தரம் பொருந்தியதாக உள்ளது படம். தமிழ் மொழியாக்கமும் தெளிவாக இருக்கிறது. 

கடும் போராட்டத்திற்குப் பின்னும், விடாப்பிடியாக முயற்சித்து தமிழில் வெளிவரக் காரணமான என்.எப்.டி.சி-யின் சென்னை கிளை அதிகாரிகளைப் பாராட்ட வேண்டும். ஆனால் இதன் வெற்றி நம் கையில்தான் இருக்கிறது. தமிழகத்தின் பெருநகரங்களில் மட்டும், அதுவும் சொற்ப திரையரங்குகளில் பகல்காட்சியாக மட்டும் வெளிவந்திருக்கும் அம்பேத்கர் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாகச் சென்று பார்ப்பதும், முழுமையாக ஓடும் வகையில் அதனை வெற்றியடையச் செய்வதன் மூலமாகவும் நமது தலைமுறையில் ஓர் எழுச்சியை உருவாக்கவும், அடுத்த தலைமுறைக்கு புரட்சிச் சிந்தனையை விதைக்க வேண்டியது நமது கடமையாகும். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இப்படத்தைக் காட்டச் செய்து அம்பேத்கரை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஏற்கெனவே அம்பேத்கர் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 லட்சத்தை வழங்கி, அம்பேத்கர் மீதும் அவர் கொள்கைகள் மீதும் தனக்குள்ள ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்தியிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியையும் திறம்படச் செய்து முடிப்பார் என்பதில் நமக்கு எள்ளளவும் அய்யமில்லை. 

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் தமிழர்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை அறிக்கை வாயிலாக வலியுறுத்தியிருக்கிறார். தமிழர்களே! நீங்கள் பார்த்துவிட்டீர்களா - ”அடக்கப்பட்ட மக்களின் அரிமா”வாம் அம்பேத்கர் வரலாற்றை?இல்லையேல் இன்றே விரைந்திடுங்கள்.. மற்றவர்களையும் அழைத்துச் செல்லுங்கள்!
நன்றி: உண்மை டிசம்பர் 16-31. 2010

Saturday, October 16, 2010

பீப்லி லைவும் எந்திரனும்

உரிந்து தொங்கும் ஊடகங்கள்
பெருநகரங்களின் சாலைப் பணிகளைச் செய்யவும், கட்டிட வேலை செய்யவும் குறைந்த கூலிக்கு சாரைசாரையாக வடநாட்டிலிருந்து வந்து குவிகிறார்களே.. சென்னையின் உணவு விடுதிகள் தொடங்கி தனியார் பாதுகாப்புப் பணிகள் வரை நீக்கமற நிறைந்திருக்கும் இவர்களெல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தனர்? சித்தாள், கொத்தனார் என்று இதற்கு முன்பு பணி செய்த தமிழ்நாட்டுக்காரர்களெல்லாம் குறைந்து போய், இத்தனை பணிகளுக்கும் எங்கிருந்து இவர்கள் கொண்டு வரப்படுகின்றனர்? உலகமயம் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் தொழிற்சாலை, அலுவலகங்கள் கட்டவேண்டியிருப்பதால், திடீரென்று பெருகிப்போன கட்டுமானத் தொழில் பணிகளுக்கென்றே திடீரென்று தோன்றியிருக்கும் சமூகமா? வர்ணாசிரமப் பிரிவினையில் இவ்வளவு பெரிய மக்கள் திரள் எத்தனையாவது சமூகம்- அல்லது ஏற்கெனவே இவர்களுக்கு இடப்பட்ட பணிகளை கிருஷ்ண பகவான் மாற்றிவிட்டாரா?

இந்தக் கேள்விகளுக்கு அவற்றிற்குள்ளேயே அடிப்படை பதில் இருக்கிறது, ஆம், உலகமயமாக்கல். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை, கட்டுமானத்தொழிலை வளர்த்துவிட்டது... ஆனால் இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமான விவசாயத்தை அழித்துவிட்டது. விதர்பாவிலிருந்து வளமான வயநாடு வரை விவசாயிகள் தற்கொலை பெருமளவில் நடைபெற்றது. பிரதமரால் துக்கம் விசாரித்து உதவித் தொகை தர மட்டும் தான் முடிந்தது. விவசாயிகள் தற்கொலைக்கான அடிப்படைக் காரணத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை; அல்லது அவர் புரிந்து கொள்ள முயலவில்லை. எம்.பி.ஏ எக்கனாமிஸ்டுகளால் தொழில் வளர்ச்சி என்று பல்லவி பாடி முதலாளிகளிடம் தான் சரணம் தேட முடியும். விவசாயத்தின் மரணத்திற்கா காரணம் தேடமுடியும்?

இப்படி இருக்கும் சிக்கல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய ஊடகங்கள் என்ன செய்கின்றன? காய்கறிகளைக் கூடைகளில் சுமந்து போய் விற்கும் தலைச்சுமை வியாபாரிகளைப்போல நின்ற இடத்திலிருந்து உலகம் முழுமைக்கும் நேரடியாக செய்தி சொல்ல வல்ல பெரிய தோசைக்கல் மாதிரி டிஷ் ஆண்டனாக்களுடன் கூடிய வசதியான வாகனங்களை வைத்துக்கொண்டு அலையும் ஊடகங்கள் என்றைக்காவது இத்தகைய பிரச்சினைகளை சமூக அக்கறையுடன் அணுகியிருக்கின்றனவா? பெருகிப் போயிருக்கும் செய்தி ஊடகங்கள், எங்கேனும் ஒரு துரும்பு கிடைக்காதா அதை ஊதிப் பெரிதாக்கி ஓரிரு நாட்கள் செய்தியை ஓட்டலாம் என்று கருதிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களின் உண்மையான உயிர்நாடிப் பிரச்சினைகள் அவர்களின் கவனத்திற்கு வருவதில்லையா? அதெப்படி இருக்க முடியும்? கண்டிப்பாக கவனத்தில் வரும். ஆனால் மக்களின் கவனம் இதிலெல்லாம் போய்விடக் கூடாது என்பதில் அவர்களின் கவனம் இருப்பதால் ஷில்பா ஷெட்டிகளையும், அமிதாப், அபிஷேக், அய்ஸ்வர்யா வகையறாக்களையும் மட்டுமே தலையாய பிரச்சினைகளாக மக்கள் மூளையில் திணித்துவருகின்றன.


இதையெல்லாம் கடந்து சூடான பிரச்சினையாக விவசாயிகள் தற்கொலை அவர்கள் கண்ணில் அகப்பட்டால் என்னாகும்? என்ற கேள்விக்கான பதில் தான் ”பீப்லி (லைவ்)”. இந்திய ஊடகங்களின் உண்மைத் தன்மையை அவர்களின் சமுதாய அக்கறையை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கும் படம். இந்தித் திரையுலகின் மிக முக்கிய நடிகரும் நல்ல திரைப்படங்களை மக்களுக்குத் தரவேண்டுமென்கிற அக்கறை கொண்டவருமான அமீர்கானின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.

முக்கிய பிரதேசத்தின் பீப்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி நத்தாவைச் சுற்றி நடக்கிறது கதை. சொந்த நிலத்தை அடகு வைத்து வாங்கியிருக்கும் கடன் தொடர்பாக வங்கியிலிருந்து அழைப்பு வந்ததால், நத்தாவும், அவரது அண்ணன் புட்டியா-வும் வங்கிக்குச் சென்று திரும்புவதில் தொடங்குகிறது படம். நிலத்தை வங்கி எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற கேள்வி நிறைந்த கவலையோடு வீடு திரும்புகிறார்கள் இருவரும். நிலையை எடுத்துச் சொன்னதும், திட்டி வெளியே அனுப்புகிறாள் நத்தாவின் மனைவி. என்ன செய்வது என்ற கவலையோடு, உள்ளூர் அரசியல்வாதியின் உதவியை நாடிச் செல்கின்றனர் இருவரும். இடைத்தேர்தல் பணிகளில் இருக்கும் ஆளும் சமந்தா கட்சி அரசியல்வாதியும் அவரது அல்லக்கைகளும், ‘தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு அரசு 1 லட்சம் உதவித் தொகை தருவதாக யாரோ சொன்னதாக’ச் சொல்லி, அப்படி வேண்டுமானால் குடும்பத்தைக் காப்பாற்றலாமே என்று கிண்டலடிக்க, அதை உண்மையென்று நம்பி தற்கொலை செய்தாவது குடும்பத்தைக் காப்பது என்று முடிவுக்கு வருகிறார்கள் சகோதரர்கள். ”நான் செய்கிறேன்; நான் செய்கிறேன்” என்று இருவரும் மாறி மாறிப்பேசி, இறுதியில் தம்பியான நத்தா தற்கொலை செய்வதென்று முடிவாகிறது.

மற்றொருபுறம் வியாபாரப் போட்டி காரணமாக டி.ஆர்.பி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் அய்டிவிஎன் மற்றும் பாரத் லைவ் ஆகிய தொலைக்காட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் நத்தாவின் தற்கொலை முடிவை இவர்கள் டீக்கடையில் பேசுவதைக் கேட்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ராகேஷ், இச்செய்தியை நாளிதழில் வெளியிடுகிறார்.  இதனைப் பார்த்து அய்டிவிஎன்-ன் நட்சத்திர செய்தியாளர் பீப்லி கிராமத்திற்கு வந்து நத்தாவைப் பற்றி செய்தி வெளியிடுகிறார். அடுத்தடுத்து அனைத்து தொலைக்காட்சிகளும் பீப்லி கிராமத்தில் குவிந்து நத்தா தற்கொலை செய்து கொள்ள இருப்பதை வெளியிடுவதில் மும்முரமாகின்றன. இதன் மூலம் தங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த தொலைக்காட்சிகள் குவியக் குவிய திருவிழாக் கோலம் காண்கிறது பீப்லி.


நேரடி ஒளிபரப்பு மூலம் நத்தாவின் இரவு பகல் அத்தனை நிகழ்வுகளையும் ஒளிபரப்புகின்றன சேனல்கள். அரசுக்குப் பாதிப்பாகப் போய் இடைத்தேர்தல் முடிவு பாதிக்கப்படலாம் என்பதால் இதைத்தடுக்க ஆளுங்கட்சி முயல, அதே நேரம் இதை வைத்தே ஆதாயம் பெற எப்படியாவது நத்தா தற்கொலை செய்துகொண்டுவிட வேண்டும் என்று காய் நகர்த்துகிறது எதிர்க்கட்சியான ’அப்னாதளம்’. நிறுவவதற்கான செலவுத்தொகை தராமல் வெறும் அடி பம்பு ஒன்றினை அரசு வழங்கிச் செல்ல, வண்ணத்தொலைக்காட்சி ஒன்றினை வழங்கிச் செல்கிறார் மற்றொரு வேட்பாளர்.

காலைக்கடன்களை முடிக்க கொல்லைக்குச் சென்றாலும் பாதுகாப்புக்கு போலீஸ், தொடர்ந்து படம் பிடித்து தொல்லைதரும் தொலைக்காட்சிகள் என நத்தாவின் வாழ்க்கை வேறுவகையாகிவிடுகிறது. திடீரென அவர் ஆளுங்கட்சியில் உள்ளூர் அரசியல் வாதியால் கடத்திவைக்கப்பட்டுவிட, நத்தாவைத் தேடத் தொடங்குகின்றன அனைத்து ஊடகங்களும். கடைசியாக நத்தா ’கக்கா’ போனது இங்குதான் அதற்கான அடையாளத்தை தெளிவாகக் காண முடிகிறது என்கிற ரீதியில் தொலைக்காட்சி சேனல்கள் அலசுகின்றன. நத்தா இருக்கும் இடத்தை அறிந்து அய்டிவின்-இன் செய்தியாளருடன் அவ்விடத்திற்கு ராகேஷ் போக, அரசு இயந்திரமும், அனைத்து ஊடகங்களும் அங்கு விரைய, கடத்தி வைத்தவர்கள் தப்பிக்க முயல, நிகழும் களேபரத்தில் தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் இறந்து போகிறார். இறந்தவர் நத்தா தான் என அரசு உறுதிப்படுத்திவிட, அனைத்து ஊடகங்களும் மூட்டை கட்டிவிடுகின்றன. உள்ளூர் செய்தியாளர் ராகேஷ், தனது செல்பேசியை எடுக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டு அய்டிவிஎன் செய்தியாளரும் சென்றுவிட, சில மாதங்கள் கழிந்த பின்னரும் நத்தாவின் குடும்பத்திற்கு உதவித் தொகைகள் எதுவும் கிடைக்கவில்லை.


காரணம், நத்தா தற்கொலை செய்து கொள்ளவில்லை; விபத்தில் இறந்ததால் உதவித் தொகை கிடையாது என்று அரசு கைவிரித்துவிட்டதாக, நத்தாவின் மனைவியிடம் புட்டியா சொல்கிறார். நத்தாவின் குடும்ப நிலை இப்படி இருக்க.. இவர்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ ஒரு நகரத்தின் கட்டுமானப் பணியாளர்களில் ஒருவராக கையில் மண்வெட்டியோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார் நத்தா. ’ஜோலா மாண்டிக் கேரா’ என்ற நாட்டுப்புறப் பாடலுடன் 1991-2001க்கிடையில் மட்டும் 80 லட்சம் இந்தியர்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு சென்றிருப்பதாக சென்சஸ் அறிக்கை தகவல் குறிப்புடன் படம் முடிகிறது.

படத்தின் இயக்குநர் அனுஷா ரிஷ்வி என்டிடிவி-யில் செய்தியாளராகப் பணியாற்றிய பெண். ஊடகத்தின் உச்சபட்ச நோக்கத்தினை தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ரிஷ்வி. படத்தில் நடித்திருக்கும் பெரும்பாலானோர் நாடகத் துறையிலிருந்து வந்தவர்கள். இயல்பான அவர்களது பங்களிப்பை நடிப்பு என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தொழில்மயமாக்கல் தான் விவசாயிகளின் சிக்கலுக்குத் தீர்வு என்று கருத்து சொல்லும் மத்திய வேளாண் அமைச்சர், எந்தத் திட்டத்தையாவது சொல்லி தான் தப்பிக் கொள்ளப் பார்க்கும் முதலமைச்சர், கோர்ட் முடிவுக்குக் காத்திருக்கிறோம் என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லும் அய்.ஏ.எஸ் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரமும் செவிட்டில் அறைவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் கரித்துக் கொட்டும் கிழவி, உயிருடன் இருப்பவர்களுக்கு எதுவும் தராமல் செத்தபின்தான் அரசு உதவும் போலும் எனக் கிண்டலடிக்கும் டீக்கடைக்காரர் என சின்னச் சின்ன இடங்களிலும் படத்தை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.

’விவசாயிகள் தங்கள் தொழிலை விட்டு மாறவே கூடாது; வர்ணாசிரமம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் வேறு தொழிலுக்கு போய்விடக் கூடாது; வயல்வெளிகளிலேயே கிடந்து உழல வேண்டும்; கிராமங்கள் அழிந்துவிடக் கூடாது’ என்பதல்ல நமது விருப்பம். குலத் தொழிலிருந்து வெளியே வாருங்கள்; கிராமங்களை மறந்து நகரங்களுக்கு வாருங்கள்; கிராமங்களை நகரங்களாக்குங்கள் என்றழைத்தவர் பெரியார். ஜாதிக் கட்டுமானத்திற்கு அடிப்படையாக கிராமச்சூழல் விளங்குகிறது என்பதால் அவற்றிலிருந்து வெளியேறவும் தாங்கள் விரும்பும் தொழிலைச் செய்யும் உரிமை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும் தான் அதன் அடிப்படை. அவர்கள் விரும்புவது விவசாயமாக இருக்கும் நிலையில், அடிமைகளாக இல்லாமல், தத்தமது சொந்த நிலங்களில், அல்லது மேம்பட்ட பணியாளர்களாகவோ இருக்கும் உரிமையும் அவர்களுக்கு வேண்டும்.

தமிழகத்தின் சூழலுக்கு பீப்லி லைவ் கதை பொருந்தாமல் போகலாம். 7 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, 2 ஏக்கர் நிலம், இலவச மின்சாரம், இலவச பம்ப் செட் என்றெல்லாம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திட்டங்களை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் கலைஞர் அரசின் சாதனைகளால் இந்தியா முழுமையும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் தமிழகம் தப்பியது, ஆனால் இதைப் போன்ற உயிர்நாடிப் பிரச்சினைகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அவற்றில் கவனம் செலுத்தும் திரைப்படங்களும் தமிழில் வராமல் இல்லை. இந்தித் திரையுலகில் அமீர்கான் போன்றோர் செய்யும் இப்பணியை தமிழ்நாட்டிலும் இனவுணர்வும், திரைக் காதலும் கொண்ட பலர் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அத்தகைய திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டு ஊடகங்கள் எத்தகைய வரவேற்பை, விளம்பரத்தை அளித்திருக்கின்றன என்பதை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

கடந்த சில நாட்களாக திரும்பும் இடமெல்லாம் ஒரே ஒரு படத்தைத் தூக்கிவைத்து பேசிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள். இவை உருவாக்கியிருக்கும் பிம்பத்தினால், ஒருவேளை இப்படத்தைப் பார்க்காவிட்டால் நம்மை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துவிடுவார்களோ என்று கருதும் மனநிலைக்கு வந்திருக்கிறான் சராசரித் தமிழன். சும்மா ’சூப்பர் ஸ்டார்’ தும்மினாலே அட்டைப்படத்தில் போடும் நமது பத்திரிகைகளுக்கு மத்தியில், நாளிதழ்கள், வார இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பெரும் ஊடகங்களைத் தம் கையிலும், எஞ்சியவற்றைத் தம் கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முயலும் நிறுவனம் படத்தின் தயாரிப்பாளராக இருந்துவிட்டதால் நிலையை சொல்லத் தேவையில்லை. சந்தேகமில்லாமல் தொல்லையின் உச்சத்தில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கும் அந்தத் திரைப்படத்தின் பெயர் ’எந்திரன்’ என்று சொல்லி மீண்டும் உங்களை அலர்ஜிக்கு உட்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறோம்.

ஒன்றா இரண்டா? எத்தனைப் படங்களிலிருந்து திருட்டு? பை செண்டினல் மேன் படத்தின் கதை என்று ஒரு பக்கம்.




எனது கதையைத் தான் படமாக்கியிருக்கிறார்கள் என்று ஆர்னிகா நாசர் என்ற தமிழ் அறிவியல் சிறுகதை எழுத்தாளர் ஒரு பக்கம். இன்னும் பார்க்கப் பார்க்க நூற்றுக்கணக்கான ஆங்கிலப் படங்கள் நினைவுக்கு வருகின்றன. பின்னணியில் இருக்கும் ஒரு ரோபோட் படத்தைக் கூட, ஒரு கணினி ஆண்ட்டி வைரஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து திருடியிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் அம்பலப்பட்டுவருகிறார்கள்.

 

இவர்கள் தான் திருட்டு டிவிடி-க்கு எதிராக குண்டர் சட்டம் பாய வேண்டும் என்கிறார்கள். எளிய திரைப்படங்களைக் காப்பாற்ற திரைத்துறை விதித்திருக்கும் கட்டுப்பாடுகள், டிக்கெட் விலைக் கட்டுப்பாடுகள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, ஊடக முற்றுரிமையை உருவாக்கியதைப் போன்ற இந்தப் படத்திற்கு மற்ற ஊடகங்களும் ஜால்ரா தட்டி வரவேற்கின்றன என்பது எவ்வளவு கேவலம்?


ஹாலிவுட் திரைப்படக்காரர்கள் வாயில் போட்டு மீண்டும் மீண்டும் மென்று, அரைத்து, குதப்பித் துப்பிய அரதப் பழசான கதையைத் தூக்கிவைத்துக் கொண்டு, அதற்குக் கோடிக் கணக்கில் செலவு செய்து, உச்சநட்சத்திரங்களைக் கொண்டு நிரப்பி, ’இப்படம் பார்க்கவில்லையென்றால் நீ மனிதனாகப் பிறந்ததே வேஸ்ட்’ என்ற ரீதியில் விளம்பரங்கள் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்; அதை அனைத்து ஊடகங்களும் வெட்கமில்லாமல் வரிந்துகட்டி ஆதரிக்கிறார்கள் என்றால் தமிழர்களை மடையர்களிலும் கேடான மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா  பொருள்? நாம் எத்தகைய படங்களை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறோம் மீண்டும் ஒரு முறை உறுதிசெய்து கொள்ளுதல் நல்லது.

பீப்லி லைவ் ஊடகங்களை உரித்துக் காட்டியிருக்கிறது என்றால், எந்திரன் படத்தின் மூலம் ஊடகங்கள் தாங்களே நிர்வாணப்பட்டு நிற்கின்றன என்று தான் சொல்லவேண்டியிருக்கிறது.

Sunday, May 23, 2010

அங்காடித் தெரு



தமிழ்நாட்டின் பரப்பளவில் மூன்று கோடியே 20 லட்சத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ள 10 மீட்டர் அகலமும் 405 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு குறுகலான தெருவில் இருந்து மட்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு 10 சதவிகிதத்திற்கு குறையாமல் விளம்பரம் வருகிறது என்றால் சந்தேகமில்லாமல் அது சென்னை தியாகராயர் நகர், ரங்கநாதன் தெருவிலிருந்து தான்!

மாம்பலம் - தியாகராயர் நகர் தொடர் வண்டி நிலையத்திற்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்தத் தெருவில் தான் சென்னையின் மக்களின் பெரும்-பகுதியினரின் பேஷன் மாற்றம் நிர்ணயிக்கப்-படுகிறது. நெரிசலான பல மாடிக் கட்டடங்-களிலும், சின்னச் சின்ன சந்துகளிலும், பொந்துகளிலும் உள்ள கடைகளில் பணியாற்றுவோர், தெருவின் இரு ஓரங்களிலும், மத்தியிலும் நீளமாக 'தெருவே உலகம்; ஊனுடம்பே கடை' என தானே விற்பனையக-மாக மாறிப்போய் வியாபாரம் செய்வோர் என பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையும் இந்தத் தெருவில் தான் எந்த மாற்றமும் அற்று ஓடிக்கொண்டிருக்கிறது.


சென்னையில் வசிப்போர் இந்த இடத்தை-யோ, அதன் நெருக்கத்தையோ அறியாமல் இருந்திருக்க முடியாது. ஒரே கடையில் எல்லாவற்றையும் 'அள்ளிக்' கொள்ளும் வாய்ப்புக்காகவும், தங்களுக்குப் பிரியமான நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் கடை என்பதற்காகவும், நட்சத்திரங்கள் விளம்-பரங்களில் தோன்றி அழகாக்கிய (அழுக்காக்கிய) உடைகளை தாங்களும் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் ஒவ்வொரு நாளும் அங்கு கூடுவோர் ஆயிரம். வண்ண வண்ண துணிகளை அணிந்து நிற்கும் பொம்மைகளை, அந்த உடைகளுக்காக பார்த்த அவர்கள், எப்போதாவது அக்கடையில் இயந்திர பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்திருப்பார்களா? இயக்குநர் வசந்த பாலன் பார்த்திருக்கிறார். அதுதான் "அங்காடித் தெரு".

சென்னையில் முழுதும் குளிரூட்டப்பட்ட 5 மாடிக் கட்டடத்தில் இயங்கும் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்கு ஆள் எடுப்பதற்காக திருநெல்வேலி ஜங்சன் அருகில் நடைபெறும் சிறப்பு முகாமில், எப்படியேனும் தேர்வாகி வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குவிந்திருக்கும் இளைஞர்களில் ஜோதிலிங்கமும் ஒருவன். ஆள் இல்லா லெவல் கிராசிங்கில் ரயிலில் சிக்கிச் சிதறிய ஆட்டோ விபத்தில் தந்தையை இழந்ததால், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, தான் முடித்த 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மேல் படிப்புக்கு வழியின்றி குடும்பத்தைக் காக்க வேலை தேடியவன். அவன் நண்பன் மாரிமுத்துவோ, தேர்வில் தோல்வியடைந்து சினேகா அக்கா இருக்கும் ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் 'அப்பா சந்நியாசம் போய்விட்டதாக'க் கூறி பணியில் சேர்ந்திருப்பவன். 'நம்ம ஆளுகளா பார்த்து எடுங்க. அப்பா இல்லாதவன், அக்கா, தங்கச்சி இருக்கிறவனாப் பாத்து வேலைக்கு எடுங்க. அப்பத்தான் பொத்திக்கிட்டு வேலை பார்ப்பானுங்க' என்ற தகுதிகளின் அடிப்படையில் தான் ஆள் தேர்வு நடைபெறுவதால் படிப்பு கவலை இல்லை. 'எச்சிக்கையை ஓட்டினா ஆயிரம் காக்காய்' கிடைக்கும் வாய்ப்பிருந்தும், தேரிக் காட்டில் கிடந்துழலும் 'நம்ம' பயலுகளுக்கு தன்னா-லானதை செய்யும் பேருள்ளத்தோடு இவர்களை 'கொத்தடிமை' வேலைக்கு எடுத்துக் கொள்கிறார் அண்ணாச்சி.

ஆம். சேல்ஸ் 'மேன்' வேலை என்று தான் சொல்லி அழைத்து வருகிறார்கள்... ஆனால் மனிதனாய் மதிக்கத்தான் யாரும் இல்லை. சிறையினும் கொடிய அவர்களின் அன்றாட வாழ்க்கை திரையில் விரிகிற போது-தான், இப்படியும் இருக்குமா என்று சந்தேகக் கண்ணோடு வியக்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால், "நான் காட்டியது கொஞ்சத்திலும் கொஞ்சமே.. மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்னால் இதை மட்டும்தான் காட்ட முடிந்தது" என்கிறார் இயக்குநர்.

ஆண், பெண் இரு பாலரின் கடுமையான உழைப்பு, ஒரு நிமிடம் ஓய்வென்றோ, களைப்பென்றோ அமர்ந்தாலும் அவர்கள் சந்திக்கும் அடி, உதை, பாலியல் தொல்லைகள் என்று காட்சிக்குக் காட்சி, அந்தக் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நவீன கொத்தடிமைகள் அனுபவிக்கும் கொடுமைகளி-லிருந்து சில பருக்கைகள் மட்டுமே காட்டப்-படுகிறது. வகை தொகையில்லாமல் நடக்கும் இந்த வன்கொடுமைகள் வெளித் தெரியாமல் இருக்க காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட ஒவ்வொரு துறைக்கும் 'கொட்டி அழும்' அண்ணாச்சியின் துயரம்(!?) கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காலை 8 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நின்று கொண்டே பணியாற்றியதால் ரத்தக்-குழாயில் கெட்ட ரத்தமெல்லாம் சேர்ந்து வெரிக்கோஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரைக் காட்டும் போது ஒரு நிமிடம் நாம் உறைந்து தான் போகிறோம். செந்தில் முருகன் ஸ்டோர்ஸில் மட்டுமல்லாமல், அந்த அங்காடித் தெருவில் காலத்தை ஓட்டும் பல்வேறு கதாபாத்திரங்களின் வழியே குட்டிக் குட்டிச் சிறுகதைகள் திரைக்கதைக்குள் வந்துபோ-கின்றன. பிச்சையெடுத்து வாழ்ந்துவந்த வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி, தான் கட்டிக்-கொண்ட முன்னாள் பாலியல் தொழிலாளியின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை தன்னைப்-போலவே வளர்ச்சி குறைவற்று இருந்துவிடக்-கூடாது என்று கடவுளை வேண்டியிருக்க பிறந்த குழந்தையோ அவரைப் போலவே இருக்கிறது. மிகுந்த சோகத்தோடு செல்லும் அவரது நிலைக்கு மாறாக மிகுந்த மகிழ்ச்சியோடு செல்லும் அவரது மனைவி அதற்கு சொல்லும் காரணம் மனிதர்களின் உணர்வுகள் எப்படி-யெல்லாம் இருக்கின்றன என்பதற்கு ஓர் அற்புதமான சான்று.

ஒரே அறையில், புரண்டு படுக்கக்கூட இடமின்றி, சரக்கு மூட்டைகளைப் போல் சாய்ந்துகிடப்பதையும், அண்டா சோற்றுக்குள் தட்டை விட்டு அதற்குள் போட்டியிடும் 20 தட்டுகளிடமிருந்து தட்டி விடாமல் சோற்றை எடுக்கும் சாமர்த்தியத்தையும், ஒரு நிமிடம் தாமதமானாலும் ஒரு ரூபாய் பிடிக்கப்படும் சம்பளத் தொகையை முழுதாக வாங்கி வீட்டுக்கு அனுப்ப அவர்கள் பொறுத்துக்கொள்ளும் அத்தனை வதைகளையும் அதன் கோரம் குறையாமல் வெளிச்சமிடுகிறது படம். ஒரே ஒரு புடவை எடுப்பதற்காக 'இதே கலர்ல' வேற என்னென்ன இருக்கோ எடுத்துப் போடுங்க..' என்று கேட்கும் போது, இரண்டுக்கு மேல் மாதிரி எடுத்துப் போடாத கடைப் பணியாளர்-களை நோக்கி எப்போதும் எரிச்சல் பார்வையைப் படரவிடும் வாடிக்கையாளர்-களுக்கு அந்த சலிப்புக்கான காரணம் இனி தெரியக் கூடும்.


முதன்மைக் கதாபாத்திரங்களான கனி (அஞ்சலி), ஜோதிலிங்கம்(மகேஷ்), கங்காணி (இயக்குநர் ஏ.வெங்கடேஷ்), அண்ணாச்சி (பழ.கருப்பையா) மற்றும் கனியின் தோழியாக வந்து இறந்துபோகும் செல்வராணி, மாரிமுத்து ஆகியவற்றை ஏற்றிருக்கும் அனைவரும் வெகு அழகாக தங்கள் பங்கைச் செய்துள்ளனர். வீட்டு வேலைக்கு என்று விடப்பட்டுள்ள கனியின் தங்கை பருவமடைந்துவிட அதை தீட்டு என்று நாய் கட்டியிருக்கும் இடத்திற்கு அருகில் அடைத்து வைத்திருக்கும் ஆச்சாரமான மாமியின் மனிதாபிமானம்(?!) இளங்குருத்துகள் சந்திக்கும் சொல்லொண்ணா சிக்கல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேலைக்கு வந்த இடத்தில் விருப்பம் ஏற்பட்டு வேலைக்கு பங்கம் வந்துவிடாமல் தவிக்கும் தவிப்பு, கடுமையான சூழலில் வெளி-யேற்றப்பட்டு, இரவு தங்குவதற்கு இடமின்றி பாதுகாப்பற்ற சூழலில் அலைந்து திரிதல் என இருட்டுப் பக்கங்களிலிருந்து விடுபட்டு, ரிமோட் கவர் விற்றுக் கிடைத்த வருவாயில் மகிழ்கின்றனர் கனியும், லிங்குவும் (ஜோதிலிங்-கமும்). கட்டட வேலை செய்வோர் இரவு உறங்கும் உதயம் தியேட்டர் அருகில் சாலைக்கு வந்து அங்கு தங்கள் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கின்றனர்.


இரவு ரம்மியமானது சிலருக்கு; நிம்மதியானது சிலருக்கு; இனிமையானது சிலருக்கு! அதிலும் கொசு, மின்வெட்டு என்று கொஞ்சம் இடைஞ்சல் ஏற்பட்டாலும் சகலரையும் சபிக்கிறோம். ஆனால், இரவு படுக்க இடமின்றி, இன்றைக்கு உறக்கம் சாலையிலா, பாலத்துக்கு அடியிலா, சாக்கடைக்குப் பக்கத்திலா என்று சாக்குப்பையைத் தேடி அலையும் ஏதுமில்லா-தோருக்கு? இதற்கு நடுவில் தான் அவர்களின் காதலும், வாழ்க்கையும். ஒரே காட்சிதான் உலுக்குகிறது உண்மை. சாலையோரம் படுத்துறங்கும் தொழிலாளர்-களின் மீது லாரி ஏறி ரத்தச் சகதியாய் மாறிய இடத்திலிருந்துதான் தொடங்குகிறது படம். இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த நிகழ்வுதான்! ஆனால், அதை கதாநாயகன் கனன்று எழுவதற்கான காரணமாகக் காட்டி கதநாயகனை உயர்த்திப்பிடிக்கும் வழக்கமான படங்களைப் போலல்லாமல், மனதில் தைக்கும் விதமாக அந்த உண்மையை உணர்த்தியிருக்-கிறார். கால்களை இழந்து நிற்கும் சேர்மக்-கனியைத் தன் துணையாக ஏற்று, வாழ்க்கையைத் தங்களை நம்பித் தொடங்குகின்றனர். அடுத்தவர் கடையில் வேலை தேடித் தேடி அலையாமல், தொழில் செய்யத் தொடங்கி ஒரு நேர்மறையான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.

இந்த நேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய மற்றொன்று - அமைப்பு சாராத இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை. பணி நிரந்தரம், உரிய ஊதியம், உரிமைகளைக் கேட்கக் கூட முடியாமல் தவிக்கும் அல்லது தங்களுக்கென்று உரிமைகள் இருக்கின்றன என்பது கூடத் தெரியாத இந்தத் தொழிலாளர்களுக்காக ஒரு குரல் எழும்ப வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துகிறது. செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் என்பது கற்பனைப் பெயராக இருக்கலாம்; அல்லது ஏதோ ஒரு கடையை உங்களுக்கு நினைவுபடுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஏதோ ஒரு கடையில் மட்டும் நடப்பதல்ல; ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும். தமிழரின் வாழ்க்கையைப் பதிவு செய்யத் தவறிய தமிழ் சினிமாக்களின் மத்தியில், முக்கிய பதிவுகளில் ஒன்றாக வெளிவந்திருக்கிறது அங்காடித் தெரு.


வாழ்க்கையின் பக்கங்களில் வெகு இயல்பாக நாம் கடந்துபோகும், காண மறுக்கும், உணராமல் தவிர்க்கும், நெஞ்சைச் சுடும் நிஜங்-களை இயல்பான கதையோட்டத்தில் அமைந்த நேர்த்தியான திரைக்கதையோடு கண் முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் வசந்த பாலன். வரலாறுகள் எல்லாம் வெற்றிபெற்றோரைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்போது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்திலும் தோல்வியடைந்தவனைப் பற்றிப் பதிவு செய்த இவரது "வெயில்" திரைப்படம் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த புதிய பரிமாணம். 'அங்காடித் தெரு' வசந்தபாலனுக்கு ஒரு புதிய பரிணாமம்.
- சமா.இளவரசன்

உண்மை மே 01-15 2010